குடும்பம் நடத்த வராத கோபம்... மனைவியின் கால்களைக் கொடூரமாக வெட்டிய கணவன்!
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே குடும்பம் நடத்த வர மறுத்த மனைவியைச் சமாதானம் செய்து காரில் அழைத்துச் சென்ற கணவன், வழியில் ஏற்பட்ட தகராறில் மனைவியின் முகத்தில் மிளகாய் பொடி தூவிக் கால்களைக் கத்தியால் கொடூரமாக வெட்டிய நடுக்கத்தை ஏற்படுத்தும் சம்பவம் அரங்கேறியுள்ளது.
கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் பிஜூ. இவருக்கும் மல்லிகா என்ற பெண்ணுக்கும் திருமணம் ஆகி குடும்பம் நடத்தி வந்த நிலையில், இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கணவனுடன் கோபித்துக் கொண்ட மல்லிகா, நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்து தங்கியிருந்தார்.
இந்நிலையில், பந்தலூருக்கு வந்த பிஜூ, தனது மனைவி மல்லிகாவிடம் இனிமேல் சண்டை போடாமல் குடும்பம் நடத்தலாம் எனச் சமாதான வார்த்தைகளைக் கூறி, அவரைத் தனது காரில் கேரளாவுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
கார் பந்தலூர் பகுதியில் இருந்து கேரளா நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, கணவன்-மனைவி இருவருக்கும் இடையே மீண்டும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மல்லிகா தன்னுடனோ அல்லது தனது ஊருக்கோ வர மறுத்து வாக்குவாதம் செய்ததால் ஆத்திரமடைந்த பிஜூ, காரை ஒரு ஓரமானப் பகுதியில் நிறுத்தியுள்ளார்.
திடீரெனத் தான் மறைத்து வைத்திருந்த மிளகாய் பொடியை மனைவி மல்லிகாவின் முகத்தில் தூவியுள்ளார். கண் எரிச்சலால் மல்லிகா அலறியடித்த போது, பிஜூ தான் வைத்திருந்த கத்தியை எடுத்து மல்லிகாவின் இரு கால்களையும் கொடூரமான முறையில் வெட்டிப் படுகாயப்படுத்தியுள்ளார்.
மல்லிகாவின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியினர் ஓடி வருவதைக் கண்ட பிஜூ, அங்கிருந்து தப்பியோட முயன்றார். எனினும், பொதுமக்கள் உதவியுடன் பந்தலூர் காவல்துறையினர் பிஜூவை மடக்கிப் பிடித்து அதிரடியாகக் கைது செய்தனர். ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மல்லிகாவை மீட்ட போலீசார், அவரை சிகிச்சைக்காக உடனடியாக ஊட்டி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கைது செய்யப்பட்ட பிஜூவிடம் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அவர் ஒரு அதிர்ச்சியூட்டும் விசித்திர வாக்குமூலத்தை அளித்துள்ளார். "என்னுடன் குடும்பம் நடத்த வராமல் பந்தலூரிலேயே தங்கியிருந்த மனைவியைக் கால்களை வெட்டியாவது மாற்றுத்திறனாளியாக்கி, என்னுடன் ஊருக்கு அழைத்துச் சென்று விடலாம் என்று நினைத்தேன். அதனால்தான் இந்த முடிவை எடுத்தேன்" என்று அவர் போலீசாரிடம் கூறியுள்ளார். இந்த கொடூரச் சம்பவம் நீலகிரி மற்றும் கேரள எல்லைப் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.