விண்ணைப் பிளந்த அரோகரா கோஷம்... திருவண்ணாமலையில் மகா தீபத் தேரோட்டம் தொடங்கியது!
உலகப் புகழ்பெற்ற திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் நடைபெற்று வரும் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகா தேரோட்டம், விழாவின் 7-ஆம் நாளான இன்று காலை கோலாகலமாகத் தொடங்கியது. லட்சக்கணக்கான பக்தர்கள் "அண்ணாமலையாருக்கு அரோகரா" என்ற பக்தி முழக்கத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.
கார்த்திகை தீபத் திருவிழா கடந்த நவம்பர் 15-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. விழாவின் 7-ஆம் நாளான இன்று அதிகாலை முதலே பஞ்சமூர்த்திகளுக்குச் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட பஞ்சரதங்களில் சுவாமிகள் எழுந்தருளினர்.
காலை சுமார் 7 மணி அளவில் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டுத் தேரோட்டம் தொடங்கியது. முதலில் விநாயகர் தேர் பக்தர்களால் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுப்பிரமணியர் (முருகர்) தேர், பெரிய நாயகர் எனப்படும் அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலையம்மன் எழுந்தருளிய பிரம்மாண்ட மகா ரதம், பராசக்தி அம்மன் தேர் மற்றும் சண்டிகேஸ்வரர் தேர் ஆகிய ஐந்து தேர்களும் மாடவீதிகளில் ஒன்றன்பின் ஒன்றாக வலம் வர உள்ளன.
மகா தேரோட்டத்தைக் காணவும், தேரை வடம் பிடித்து இழுத்துச் சுவாமி தரிசனம் செய்யவும் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்துள்ளனர். திருவண்ணாமலை மாடவீதிகள் முழுவதும் பக்தர்களின் வெள்ளத்தில் திணறி வருகிறது.
பக்தர்களின் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும், தேரோட்டம் எவ்வித இடையூறுமின்றி நடைபெறவும் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாடவீதிகளில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், பக்தர்களுக்குத் தேவையான குடிநீர், மருத்துவ முகாம்கள் மற்றும் சிறப்புப் பேருந்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
கார்த்திகை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்வான மகா தீபம் வரும் நவம்பர் 24-ஆம் தேதி மாலை திருவண்ணாமலை மலை உச்சியில் ஏற்றப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.