திரும்பும் திசையெல்லாம் ‘அரோகரா’ கோஷம்... இன்று பழனியில் பங்குனி உத்திரத் தேரோட்டம்!
அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில், பங்குனி உத்திரத் திருவிழா கொயேற்றத்துடன் தொடங்கிய நிலையில், இன்று தேரோட்டம் நடைபெறுகிறது. பழனியில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் திரண்டுள்ள நிலையில் திரும்பும் திசையெல்லாம் 'அரோகரா' கோஷம் எதிரொலிக்கிறது.
10 நாட்கள் நடைபெற்ற பங்குனி விழாவின் முக்கிய நிகழ்வுகளாக நேற்று முத்துக்குமாரசுவாமி, வள்ளி - தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது.
இன்று ஏப்ரல் 1 புதன் கிழமை பங்குனி உத்திரத் திருநாளை முன்னிட்டுப் பழனி கிரிவீதியில் மகா தேரோட்டம் நடைபெறுகிறது. வரும் ஏப்ரல் 4ம் தேதி கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
பழனி முருகன் சிலை நவபாஷாணத்தால் ஆனது என்பதால், கோடை காலமான பங்குனி மற்றும் சித்திரை மாதங்களில் முருகனை குளிர்விக்கப் பக்தர்கள் காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தக் காவடி எடுத்து வந்து அபிஷேகம் செய்வது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.
திருவிழா காலங்களில் வழக்கமாகத் தங்கத்தேர் புறப்பாடு நிறுத்தப்படுவதுண்டு. அந்த வகையில், இந்த ஆண்டு பங்குனி உத்திர விழாவையொட்டி ஏப்ரல் 3ம் தேதி வரை தங்கத்தேர் புறப்பாடு நிறுத்தப்படுவதாகக் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
பக்தர்களின் வசதிக்காகக் குடிநீர், நிழற்பந்தல் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பழனி கோவில் நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் தீவிரமாகச் செய்து வருகின்றனர். பக்தர்கள் பல மாவட்டங்களில் இருந்தும் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பழனி மலை முருகனை தரிசிக்க விதவிதமான காவடி சுமந்து வருகின்றனர்.