வளைகாப்பு முடிந்து திரும்பியபோது ஆட்டோ கவிழ்ந்து விபத்து; குழந்தை உட்பட 5 பேர் படுகாயம்!
தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே வளைகாப்பு விழா ஒன்றில் கலந்துகொண்டுவிட்டு ஆட்டோவில் வீடு திரும்பியபோது, எதிர்பாராத விதமாக ஆட்டோ ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 வயது சிறுவன் உள்பட 5 பேர் பலத்த காயமடைந்தனர்.
தஞ்சை மாவட்டம் திருவோணத்தை அடுத்துள்ள வெங்கரை மாஞ்சக்காடு பகுதியைச் சேர்ந்த இளங்கோவனின் மனைவி பத்மினி (45), சுரேஷின் மனைவி இலக்கியா (35), மகாலிங்கத்தின் மனைவி நிவேதா (30) மற்றும் நிவேதாவின் 4 வயது மகன் சுபாஷ் ஆகியோர் கரம்பவிடுதி பகுதியில் நடைபெற்ற உறவினர் ஒருவரின் வளைகாப்பு விழாவிற்குச் சென்றுள்ளனர்.
விழா முடிந்த பின்பு, பெரிய கோட்டைக்காடு பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் (55) என்பவரது ஆட்டோவில் அவர்கள் அனைவரும் மீண்டும் தங்களது ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, வழியில் உள்ள ஒரு ஆற்றைக் கடக்க முயன்றபோது ஆட்டோ ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென ஆற்றுக்குள் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
ஆட்டோ ஆற்றுக்குள் கவிழ்ந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் மற்றும் அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் உடனடியாக ஆற்றுக்குள் இறங்கி மீட்புப் பணியில் ஈடுபட்டனர். ஆட்டோவின் இடிபாடுகளுக்குள் சிக்கிப் படுகாயமடைந்த 4 வயது சிறுவன் சுபாஷ், பத்மினி, இலக்கியா, நிவேதா மற்றும் ஆட்டோ ஓட்டுநர் ஆனந்தன் ஆகிய 5 பேரையும் பொதுமக்கள் பத்திரமாக மீட்டனர்.
விபத்தில் படுகாயமடைந்த 5 பேரும் உடனடியாக சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.