வங்கி மேலாளர் கன்னத்தில் பளார்... அழகிரி மகளிடம் போலீசார் விசாரணை!

 

சென்னையில் வங்கி மேலாளரைத் தாக்கிய விவகாரத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி மீது காவல்துறையினர் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை அடையாறில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளையில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த வங்கி இயங்கி வரும் கட்டிடம் கயல்விழிக்குச் சொந்தமானது என்று கூறப்படுகிறது. அங்கிருந்த லிப்ட் பழுது அடைந்தது தொடர்பாக வங்கி மேலாளருக்கும் கயல்விழிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றவே, ஆத்திரமடைந்த கயல்விழி வங்கி மேலாளரைக் கன்னத்தில் அறைந்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து வங்கி மேலாளர் அளித்த புகாரின் பேரில், சாஸ்த்ரி நகர் காவல்துறையினர் கயல்விழி மீது 4 வெவ்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து, விசாரணைக்கு ஆஜராகுமாறு காவல்துறையினர் சம்மன் அனுப்பியிருந்த நிலையில், கயல்விழி சாஸ்த்ரி நகர் காவல் நிலையத்தில் இன்று நேரில் ஆஜரானார். அவரிடம் காவல்துறையினர் சம்பவம் குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.