காட்டிக் கொடுத்த நகக்கீறல்... தூத்துக்குடி மாணவி கொலை வழக்கில் குற்றவாளி சிக்கியது எப்படி?!
தமிழகத்தையே உலுக்கிய விளாத்திகுளம் 12-ம் வகுப்பு மாணவி கொலை வழக்கில், துல்லியமான அறிவியல் பூர்வமான சான்றுகளின் அடிப்படையில் டிஎன்.ஏ. சோதனையின் அடிப்படையில் குற்றவாளியின் கைகளில் இருந்த நகக்கீறல்கள் மூலமான சோதனையின் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்பவரைத் தனிப்படை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கில் எவ்வித நேரடிச் சாட்சிகளும் இல்லாத நிலையில், காவல்துறை கையாண்ட நவீனத் தொழில்நுட்ப முறைகள் குற்றவாளியைக் காட்டிக்கொடுத்துள்ளன. காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் 15க்கும் மேற்பட்டோரைப் பிடித்து விசாரித்த போது, முனீஸ்வரனின் கைகளில் நகக்கீறல்கள் இருப்பதைக் கவனித்தனர். உயிரிழந்த மாணவி தற்காப்பிற்காகப் போராடிய போது, அவரது நகங்களுக்குள் குற்றவாளியின் சதைத் துணுக்குகள் சிக்கியிருந்தன. மாணவியின் நகத்தில் இருந்த சதை மற்றும் முனீஸ்வரனின் ரத்த மாதிரிகளை டிஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுத்தியதில், இரண்டும் கச்சிதமாக பொருந்திப் போனது. இதுவே அவர் மீதான வலுவான ஆதாரமாக மாறியுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள தர்ம முனீஸ்வரன் ஒரு தொடர் குற்றவாளி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது:
எட்டயபுரம் அருகே 65 வயது மூதாட்டியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் இவர் ஏற்கனவே கைதாகி இருந்தார். அந்த வழக்கிற்காக 2024ல் இவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஆயுள் தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்த முனீஸ்வரன், சமீபத்தில்தான் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். ஜாமீனில் வந்த சில நாட்களிலேயே மீண்டும் ஒரு கொடூரமான குற்றத்தைச் செய்துள்ளது பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கில், காவல்துறை இன்று தனது விரிவான விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்தது. குற்றவாளி பிடிபட்டுள்ள நிலையில், அவருக்குக் கடுமையான தண்டனை பெற்றுத் தருவதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.