#JUST IN: 4 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய தாக்குதல்.. 389 உக்ரைன் ட்ரோன்களைச் சுட்டு வீழ்த்தியது ரஷ்யா!
உக்ரைன் மீதான போர் தொடங்கி நான்கு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், ரஷ்யாவின் 13 பிராந்தியங்களைக் குறிவைத்து உக்ரைன் நடத்திய மிகப்பெரிய வான்வழித் தாக்குதலைத் தடுத்து நிறுத்தியுள்ளதாக ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது. ஒரே இரவில் உக்ரைன் ஏவிய 389 ஆளில்லா விமானங்களை தனது வான் பாதுகாப்புப் படைகள் வெற்றிகரமாக இடைமறித்து அழித்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இதில் கிரிமியா தீபகற்பம் மற்றும் மாஸ்கோவைச் சுற்றியுள்ள பகுதிகளும் அடங்கும். ரஷ்யாவின் லெனின்கிராட் பகுதியில் மட்டும் 56 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன.
இந்தத் தாக்குதலின் போது, பால்டிக் கடலில் அமைந்துள்ள ரஷ்யாவின் முக்கிய எரிசக்தி ஏற்றுமதி மையமான உஸ்ட்-லுகா துறைமுகத்தில் உக்ரைன் ட்ரோன்கள் மோதியதில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இங்கிருந்துதான் ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் உரங்கள் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
உக்ரைனின் இந்தத் தாக்குதலுக்கு முன்னதாக, நேற்று ரஷ்யா சுமார் 1,000 ட்ரோன்கள் மற்றும் 34 ஏவுகணைகளை உக்ரைனின் மக்கள் வசிக்கும் பகுதிகள் மீது ஏவித் தாக் கியது. இதில் மேற்கு உக்ரைன் நகரமான எல்விவ் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அங்குள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தேவாலயம் தீப்பற்றி எரிந்ததுடன், குறைந்தது 6 பேர் உயிரிழந்தனர் மற்றும் 50 பேர் காயமடைந்தனர்.
இந்த வான்வழித் போரினால் அண்டை நாடான மால்டோவா கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. உக்ரைனின் மின்சாரக் கட்டமைப்பை ரஷ்யா தாக்கியதில், மால்டோவா மற்றும் ருமேனியாவை இணைக்கும் முக்கிய மின்சாரம் பாதை துண்டிக்கப்பட்டது. இதனால் மால்டோவா அரசு இன்று முதல் 60 நாட்களுக்கு 'எரிசக்தி அவசர நிலை' பிரகடனம் செய்துள்ளது. பொதுமக்கள் மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு அந்நாட்டு அதிபர் மாயா சாண்டு கேட்டுக்கொண்டுள்ளார்.
ரஷ்யாவிற்குள் விழுந்த சில உக்ரைன் ட்ரோன்கள், எஸ்டோனியா மற்றும் லாட்வியா நாடுகளின் எல்லைகளுக்கு மிக அருகில் விழுந்தன. எஸ்டோனியாவின் மின் உற்பத்தி நிலைய புகைபோக்கி ஒன்றின் மீது ட்ரோன் உரசிச் சென்றதில் சிறு சேதம் ஏற்பட்டது. இருப்பினும், தங்களை உக்ரைன் குறிவைக்கவில்லை என அந்த நாடுகள் தெரிவித்துள்ளன.