முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்க்கை வரலாறு படமாகிறது.. சமுத்திரக்கனி - போஸ் வெங்கட் கூட்டணியில் மெகா புராஜெக்ட்!

 

தமிழக அரசியல் களத்தில் அரை நூற்றாண்டுகாலப் போராட்டங்களைக் கடந்து முதலமைச்சர் பொறுப்பினை எட்டியுள்ள மு.க.ஸ்டாலினின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுக்கத் திரைத்துறையில் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பிரபல நடிகரும் இயக்குநருமான சமுத்திரக்கனி, தனது நெருங்கிய நண்பரும் இயக்குநருமான போஸ் வெங்கட் உடன் இணைந்து இதற்கான முதற்கட்டப் பணிகளைத் தொடங்கியுள்ளார். மு.க.ஸ்டாலின் அவர்களின் இளமைக்காலம், மிசா காலத்தில் அவர் அனுபவித்த சிறை கொடுமைகள் மற்றும் அவரது அரசியல் எழுச்சி குறித்த தகவல்களைத் திரட்டுவதற்காக அவரது பழைய நண்பர்கள் மற்றும் கழக முன்னோடிகளைச் சமுத்திரக்கனி சந்தித்து வருவதாகக் கூறப்படுகிறது. போஸ் வெங்கட் இந்தத் திரைப்படத்திற்கான அடிப்படைத் தரவுகளைச் சேகரித்து வர, சமுத்திரக்கனி அதன் திரைக்கதை மற்றும் இயக்கப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்தத் திரைப்படத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனியே நடிக்க அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. அவரது உடல்வாகு மற்றும் தீவிரமான நடிப்புத்திறன் இக்கதாப்பாத்திரத்திற்குப் பொருத்தமாக இருக்கும் எனத் திரைத்துறையினர் கருதுகின்றனர். இருப்பினும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

தற்போது முழுமையான திரைக்கதை வடிவம் (Draft) தயாராகி வரும் நிலையில், இந்தப் பணிகளை முடித்த பிறகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோரிடம் நேரில் காண்பித்து அனுமதி பெறத் திட்டமிடப்பட்டுள்ளது. அனுமதி கிடைக்கும் பட்சத்தில், இந்தப் படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.