பீகாரை தன் வசமாக்கியது பாஜக... இன்று புதிய முதல்வராக சாம்ராட் சௌத்ரி பதவியேற்பு - 74 வருட காத்திருப்பு முடிவுக்கு வந்தது!
1952ம் ஆண்டு முதல் பீகார் மாநில அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வந்தாலும், இதுவரை ஒருமுறை கூட முதலமைச்சர் நாற்காலியில் அமர முடியாத குறையை பாரதிய ஜனதா கட்சி தற்போது துடைத்தெறிந்துள்ளது. பீகாரின் முதல் பாஜக முதலமைச்சராக சாம்ராட் சௌத்ரி இன்று காலை முறைப்படி பதவியேற்க உள்ளார்.
நீண்டகால முதலமைச்சராக இருந்த நிதிஷ்குமார், மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்று டெல்லி அரசியலுக்குப் பயணமானதைத் தொடர்ந்து, இன்று பிற்பகலில் பீகார் பாஜக எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் நடைபெற்றது.
பாஜக மேலிடப் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான சிவாரஜ் சிங் சௌஹான் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தற்போதைய துணை முதலமைச்சர் சாம்ராட் சௌத்ரி சட்டமன்றக் கட்சித் தலைவராக ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நிதிஷ்குமார் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் வழங்கிய சில நிமிடங்களிலேயே, சாம்ராட் சௌத்ரி பீகாரின் அடுத்த முதலமைச்சராக பாஜக மேலிடத்தால் அறிவிக்கப்பட்டார்.
பீகாரின் புதிய முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சாம்ராட் சௌத்ரி, இன்று காலை 11 மணியளவில் பாட்னாவில் உள்ள 'லோக் பவன்' வளாகத்தில் முதலமைச்சராகப் பதவியேற்க உள்ளார். அமித் ஷா உள்ளிட்ட பாஜக-வின் முன்னணித் தலைவர்கள் பலரும் இந்த விழாவில் பங்கேற்க உள்ளனர்.
2020 முதல் முதல்வராக இருந்த நிதிஷ்குமார், இனி தேசிய அரசியலில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார். 2025 சட்டசபை தேர்தலில் 89 இடங்களைப் பிடித்து, பீகாரின் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பாஜக-விற்கு, முதல்வர் பதவியை வழங்க ஐக்கிய ஜனதாதளம் (JDU) இம்முறை சம்மதித்துள்ளது. குஷ்வாஹா சமூகத்தைச் சேர்ந்த சாம்ராட் சௌத்ரியை முதல்வராக்குவதன் மூலம், ஒரு பலமான வாக்கு வங்கியைத் தன்பக்கம் இழுக்க பாஜக திட்டமிட்டுள்ளது.