கதறிய சிறுவன்... தோள்பட்டையில் குத்திய இரும்புக் கம்பி வாய் வழியாக வெளியேற்றம் - சூரத்தில் சோகம்!

 

குஜராத் மாநிலம் சூரத்தில் கட்டிடத்தின் 3-வது மாடியிலிருந்து தவறி விழுந்த 13 வயது சிறுவனின் தோள்பட்டையில் குத்திய இரும்புக் கம்பி வாய் வழியாக வெளியே வந்த கோர விபத்தில், மருத்துவர்களின் தீவிர சிகிச்சையால் அச்சிறுவன் நல்வாய்ப்பாக உயிர் தப்பியுள்ளார்.

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நஜிஷ் (13) என்ற சிறுவன், சூரத்தில் உள்ள தாருல் உலூம் மெஹ்மூதியா மதரஸாவில் தங்கிப் படித்து வருகிறான். வகுப்புகள் முடிந்ததும் மசூதியின் 3-வது மாடியில் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன், அருகில் கட்டுமானத்தில் இருந்த கட்டிடத்திற்குத் தாவ முயன்றபோது நிலைதடுமாறித் தரைத்தளத்தில் விழுந்தான்.

தரைத்தளத்தில் நின்றுகொண்டிருந்த தடிமனான இரும்புக் கம்பி சிறுவனின் தோள்பட்டை/முதுகுப் பகுதியில் குத்தி, கழுத்து மற்றும் உமிழ்நீர்ச் சுரப்பி வழியே ஊடுருவி வாய் வழியாக வெளியே நீட்டிக்கொண்டிருந்தது. சம்பவ இடத்திலிருந்த பொதுமக்கள் உடனடியாகச் செயல்பட்டு, சிறுவனின் உடலில் குத்தியிருந்த கம்பியின் வெளிப்பகுதியைக் கருவிகள் மூலம் வெட்டி அகற்றி, அவனைச் சூரத் சிவில் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

சூரத் சிவில் மருத்துவமனை மருத்துவர்கள், காது மூக்கு தொண்டை வல்லுநர்கள் இணைந்து அவசர அறுவை சிகிச்சை மேற்கொண்டு, சிறுவனின் வாயிலிருந்து இரும்புக் கம்பியைப் பாதுகாப்பாக அகற்றினர்.

உமிழ்நீர்ச் சுரப்பி மற்றும் கழுத்துப் பகுதிகளில் ஏற்பட்ட சிறு காயங்கள் சீரமைக்கப்பட்டு, சிறுவன் தற்சமயம் தீவிர சிகிச்சைப் பிரிவில் கண்காணிக்கப்பட்டு வருகிறான். சிறுவனின் உடல்நிலை முழுமையாகச் சீரடைந்த பிறகு பொது வார்டுக்கு மாற்றப்படுவார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.