"காலை உணவுத் திட்டம் தடையின்றித் தொடரும்; மெனு கார்டு மேம்படுத்தப்படும்" - அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு!

 

தமிழக அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் நலனைக் கருத்தில் கொண்டு செயல்படுத்தப்பட்டு வரும் 'முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்' புதிய அரசிலும் எவ்விதத் தொய்வுமின்றித் தொடர்ந்து மிகச் சிறப்பாகச் செயல்படுத்தப்படும் எனப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அதிகாரப்பூர்வமாக உறுதி அளித்துள்ளார்.

அரசுப் பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் கொண்டு வரப்பட்ட காலை உணவுத் திட்டம் குறித்துப் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், "தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள சூழலிலும், மாணவர்களின் கல்வி மற்றும் ஆரோக்கியம் சார்ந்த முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் எவ்விதத் தடையுமின்றித் தொடர்ந்து தவெக அரசால் சிறப்பாகக் கொண்டு செல்லப்படும்.

இதுமட்டுமன்றி, மாணவர்களின் விருப்பம் மற்றும் தேவைக்கு ஏற்ப, காலை உணவின் தரத்தை உயர்த்துவதுடன் அதன் உணவுப் பட்டியல் மேலும் சத்துக்கள் நிறைந்ததாக மேம்படுத்தப்படும்" என்று தெரிவித்துள்ளார். கோடை விடுமுறை நீடித்து வரும் சூழலில், அடுத்த கல்வி ஆண்டிற்கான பள்ளிகள் திறப்பு குறித்தும், மாணவர்களுக்கான சலுகைகள் குறித்தும் அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் அந்த முதல் நாளிலேயே, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சீருடைகள், புத்தகங்கள், நோட்டுகள் உள்ளிட்ட அனைத்து விலையில்லா நலத்திட்டப் பொருட்களும் எவ்விதத் தாமதமுமின்றி மாணவர்களின் கைகளுக்கு நேரடியாகச் சென்றடையும் வகையில் அனைத்துப் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையிலும் கல்வித்துறை சார்ந்த முக்கியத் திட்டங்கள் எவ்விதத் தடங்கலும் இல்லாமல், கூடுதல் பொலிவுடன் தொடரும் என்ற அமைச்சரின் இந்த அறிவிப்பு, அரசுப் பள்ளி மாணவர்களிடையேயும் அவர்களது பெற்றோர்களிடையேயும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.