கர்ப்பிணியை எட்டி உதைத்த கொடூரம்.. குறைப்பிரசவத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள் உயிரிழப்பு!
பணம் எனும் பேராசை மனிதர்களை எந்த அளவிற்குத் தரம்தாழ்த்தும் என்பதற்குச் சாட்சியாக, கர்நாடக மாநிலம் ஹாவேரியில் ஒரு நெஞ்சை உலுக்கும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. வாங்கிய கடனைத் திருப்பிக் கேட்டபோது ஏற்பட்ட தகராறில், நிறைமாத கர்ப்பிணியின் வயிற்றில் எட்டி உதைத்ததில், பிறந்த அன்றே இரண்டு பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்த சோகம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கர்நாடகா மாநிலம் ஹாவேரி மாவட்டம் சாவனுார் தாலுகா அல்லிபுரா கிராமத்தைச் சேர்ந்தவர் பவித்ரா. நிறைமாத கர்ப்பிணியான இவர், தனது தாயார் ஹாலவ்வாவைப் பார்க்க வந்திருந்தார். கடந்த மார்ச் 29-ஆம் தேதி இரவு, ஹாலவ்வாவிடம் கடன் கொடுத்திருந்த சுரேஷ் லமானி, பரசுராம் லமானி, மகேஷ் லமானி மற்றும் சக்குபாய் ஆகிய நான்கு பேர் வீட்டுக்கு வந்து பணத்தைக் கேட்டு மிரட்டியுள்ளனர்.
பணம் தர அவகாசம் கேட்டபோது, ஆத்திரமடைந்த அந்தக் கும்பல் ஹாலவ்வாவைத் தாக்கி மானபங்கம் செய்துள்ளது. இதனைத் தடுக்க வந்த கர்ப்பிணிப் பெண் பவித்ராவின் வயிற்றில், இரக்கமின்றி எட்டி உதைத்துள்ளனர். வயிற்றைப் பிடித்துக் கொண்டு துடித்த பவித்ரா, உடனடியாக மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
வயிற்றில் பலமான அடி விழுந்ததால் கருவிலிருந்த குழந்தைகள் பாதிக்கப்பட்டதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். இதையடுத்து, கடந்த ஏப்ரல் 7-ஆம் தேதி காலை பவித்ராவிற்கு அவசர சிகிச்சைப் பிரிவில் இரண்டு குழந்தைகள் பிறந்தன. ஆனால், அந்தப் பச்சிளம் பிஞ்சுகள் உலகைப் பார்த்த சில மணிநேரங்களிலேயே, அன்று மாலையே பரிதாபமாக உயிரிழந்தன.
இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பாகப் பவித்ராவின் தாயார் அளித்த புகாரின் பேரில், சுரேஷ் லமானி, பரசுராம் லமானி, மகேஷ் லமானி, சக்குபாய் ஆகிய நான்கு பேர் மீதும் சாவனுார் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள அவர்களைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.