இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது... கேரளா, புதுச்சேரி, அசாமில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு - 2,140 வேட்பாளர்களின் தலைவிதியைத் தீர்மானிக்கப் போகும் வாக்காளர்கள்!
தமிழ்நாடு உட்பட 5 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் திருவிழா களைகட்டியுள்ள நிலையில், கேரளா, புதுச்சேரி மற்றும் அசாம் ஆகிய மூன்று மாநிலங்களில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் நிறைவுக்கு வருகிறது.
நாளை மறுநாள் (ஏப்ரல் 9) இந்த மூன்று மாநிலங்களிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தேர்தல் விதிகளின்படி, வாக்குப்பதிவுக்கு 48 மணி நேரத்திற்கு முன்பாகவே பகிரங்கப் பிரசாரம் முடிக்கப்பட வேண்டும். அதன்படி, இன்று மாலை 5 மணிக்குப் பிறகு பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் மற்றும் ஒலிபெருக்கி மூலம் வாக்குச் சேகரிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த மூன்று மாநிலங்களிலும் மொத்தம் உள்ள 296 எம்.எல்.ஏ பதவிகளுக்கு 2,140 வேட்பாளர்கள் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.
| மாநிலம் |
வேட்பாளர்கள் எண்ணிக்கை |
சட்டமன்றத் தொகுதிகள் |
| கேரளா |
985 பேர் |
140 தொகுதிகள் |
| புதுச்சேரி |
366 பேர் |
30 தொகுதிகள் |
| அசாம் |
789 பேர் |
126 தொகுதிகள் |
இன்று மாலை வரை அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது இறுதிக்கட்ட வாக்குச் சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
புதுச்சேரியில் திமுக - காங்கிரஸ் கூட்டணி மற்றும் பாஜக - என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி இடையே கடும் போட்டி நிலவுகிறது.
கேரளாவில் இடதுசாரி முன்னணி மற்றும் ஐக்கிய ஜனநாயக முன்னணி இடையே நேரடி மோதல் நிலவுகிறது.
அசாமில் ஆட்சியைத் தக்கவைக்க பாஜக-வும், அதனைக் கைப்பற்ற காங்கிரஸ் கூட்டணியும் மல்லுக்கட்டுகின்றன.
மாலை 5 மணிக்குப் பிறகு அந்தந்தத் தொகுதிக்குச் சம்பந்தமில்லாத வெளிநபர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் வெளியேறத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நாளை ஒருநாள் மட்டும் வேட்பாளர்கள் வீடு வீடாகச் சென்று அமைதியான முறையில் வாக்குச் சேகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.