மூன்று மாத ரேஷன் பொருட்களை முன்கூட்டியே வழங்க மத்திய அரசு அதிரடி!
இந்திய உணவுக் கழகத்தின் கிடங்குகளில் அரிசி மற்றும் கோதுமை கையிருப்பு முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளதால், ஜூன் 2026 வரையிலான 3 மாத காலத்திற்கான உணவுப் பொருட்களை முன்கூட்டியே விநியோகிக்க மாநில அரசுகளுக்கு மத்திய நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் பொது விநியோக அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
185% உபரி கையிருப்பு:
தற்போதைய நிலவரப்படி, மத்திய உணவுக் கையிருப்பில் கோதுமை மற்றும் அரிசியின் அளவு நிர்ணயிக்கப்பட்ட அளவை விட மிக அதிகமாக உள்ளது. ஏப்ரல் 1-ஆம் தேதி நிலவரப்படி 21 மில்லியன் டன் (MT) இருக்க வேண்டும். தற்போதைய இருப்பு சுமார் 60.7 மில்லியன் டன் (MT). இது நிர்ணயிக்கப்பட்ட அளவை விட 185% அதிகமாகும். இதில் சுமார் 37.2 மில்லியன் டன் அரிசியும், 23.5 மில்லியன் டன் கோதுமையும் அடங்கும்.
ஏன் இந்த முன்கூட்டிய விநியோகம்?
வரும் ஏப்ரல் மாதம் முதல் புதிய கோதுமை கொள்முதல் பருவம் தொடங்க உள்ளது. புதிய தானியங்களைச் சேமிக்கப் போதிய இடம் இல்லாததால், ஏற்கனவே உள்ள இருப்பைக் காலி செய்ய இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கோடை காலத்தில் நிலவும் போக்குவரத்து மற்றும் வெப்பச் சவால்களைத் தவிர்க்கவும், பயனாளிகளுக்கு ஜூன் மாதம் வரையிலான பொருட்களை இப்போதே வழங்குவது உதவியாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.
பயனாளிகள் கவனத்திற்கு:
பிரதம மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா (PMGKAY) மற்றும் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் (NFSA) கீழ் வழங்கப்படும் இலவச உணவு தானியங்கள் இதில் அடங்கும்.
ஏப்ரல், மே மற்றும் ஜூன் ஆகிய மூன்று மாதங்களுக்கான கோட்டாவை மாநிலங்கள் ஒரே நேரத்தில் பெற்று, ஏப்ரல் அல்லது மே மாதங்களில் விநியோகிக்க வாய்ப்புள்ளது. இது மாநில அரசுகளின் விநியோகத் திட்டத்தைப் பொறுத்து மாறுபடும்.