உறுதியளித்த மத்திய அரசு... 26 நாட்களுக்குப் பின் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார் சோனம் வாங்சுக்!

 

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் மற்றும் கல்வித்துறை சீர்திருத்தங்களை வலியுறுத்தித் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பிரபல சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், மத்திய அரசின் உறுதியளிப்பைத் தொடர்ந்து தனது 26 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை அதிகாரப்பூர்வமாக முடித்துக் கொண்டார்.

குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சோனம் வாங்சுக்கை, மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா மற்றும் டாக்டர் ஜிதேந்திர சிங் ஆகியோர் நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். மத்திய அமைச்சர்கள் வழங்கிய ஜூஸ் அருந்தி, லடாக் அமைப்பின் பிரதிநிதிகள் முன்னிலையில் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை வாங்சுக் நிறைவு செய்தார்.

உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்ட சோனம் வாங்சுக் விரைவில் பூரண குணமடைய வேண்டும் எனப் பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். நீண்டகட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு மத்திய அரசு தரப்பில் அளிக்கப்பட்ட முக்கிய வாக்குறுதிகளாக, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது எவ்விதப் பழிவாங்கும் நடவடிக்கையோ அல்லது வழக்குகளோ பதிவு செய்யப்படாது.

நீட் வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறை முறைகேடுகள் குறித்து வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் விரிவான விவாதம் நடத்தப்படும். வினாத்தாள் கசிவு விவகாரத்தால் மன உளைச்சலுக்கு ஆளாகி உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்குத் தகுந்த இழப்பீடு வழங்குவது குறித்து அரசு சாதகமாகப் பரிசீலிக்கும்.

வினாத்தாள் கசிவைத் தடுக்க விரைவு நீதிமன்றங்கள் அமைத்தல் உள்ளிட்ட கடுமையான விதிகளுடன் கூடிய புதிய சட்ட முன்வடிவு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.

உண்ணாவிரதத்தை முடித்தப் பிறகு பேசிய சோனம் வாங்சுக், நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் முற்றிலும் அமைதியான வழியிலேயே தங்களது போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்றும், எந்தவொரு சூழலிலும் வன்முறைக்கு இடம் கொடுத்துவிடக் கூடாது என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.