தொகுதி மறுவரையறை மசோதாவைக் கொண்டுவர மத்திய அரசு வியூகம்; எதிர்க்கட்சிகளுக்கு முன்கூட்டியே தகவல்!
கடந்த ஏப்ரல் மாதத்தில் தி.மு.க மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 'இந்தியா' கூட்டணிக் கட்சிகளின் கடுமையான எதிர்ப்பு காரணமாக நாடாளுமன்றத்தில் தோல்வியடைந்த 'தொகுதி மறுவரையறை மசோதா 2026', தற்போது சில முக்கியத் திருத்தங்களுடன் மீண்டும் தாக்கல் செய்யப்படவுள்ளது.
கடந்த ஏப்ரல் 16 அன்று மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வாலால் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட 131-ஆவது அரசியலமைப்புத் திருத்த மசோதாவுக்குப் போதிய 'சிறப்புப் பெரும்பான்மை' கிடைக்காததால் அது தற்காலிகமாக முடக்கப்பட்டது: தற்போது நடைபெற உள்ள 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான உடனேயே, இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் மீண்டும் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
தென்மாநிலங்களின் அரசியல் அதிகாரத்தைக் குறைக்கும் வகையில் இந்த மசோதா இருப்பதாகக் கூறி தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து போர்க்கொடி தூக்கி வருகின்றன. இந்தச் சூழலில், நாடாளுமன்றத்தில் தேவையற்ற முடக்கங்களைத் தவிர்க்கும் பொருட்டு, மசோதாவில் செய்யப்பட்டுள்ள சில புதிய திருத்தங்கள் குறித்த விபரங்கள் தி.மு.க உள்ளிட்ட சில முக்கிய எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசு தரப்பிலிருந்து முன்கூட்டியே ரகசியமாக அனுப்பப்பட்டுள்ளதாகத் நம்பகமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்திய அரசு கொண்டு வரத் துடிக்கும் இந்த தொகுதி மறுசீரமைப்பு மசோதாவின் பின்னணியில் சில பிரம்மாண்ட இலக்குகள் மறைந்துள்ளன. தற்போது நாடாளுமன்றத்தில் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகபட்சமாக 850 இடங்களாக உயர்த்த இந்த மசோதா வழிவகை செய்கிறது. இதில் மாநிலங்களில் இருந்து 815 உறுப்பினர்களும், யூனியன் பிரதேசங்களில் இருந்து 35 உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்படுவர்.
இந்த மறுசீரமைப்புப் பணிகள் முடிந்த உடனேயே, கடந்த 2023-இல் நிறைவேற்றப்பட்ட மகளிர்க்கான 33% இடஒதுக்கீட்டை உடனடியாக நடைமுறைக்குக் கொண்டு வந்து, வரும் 2029 பொதுத்தேர்தலில் பெண்களுக்கான கோட்டாவை உறுதி செய்ய மத்திய அரசு அவசரம் காட்டி வருகிறது. பொதுவாக 2026-ஆம் ஆண்டிற்குப் பிறகு எடுக்கப்படும் புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தான் தொகுதி மறுசீரமைப்பு நடத்தப்பட வேண்டும் என்ற நடைமுறையில் இருந்தது. ஆனால், புதிய கணக்கெடுப்பு நடத்த தாமதமாவதால், 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை தரவுகளையே அடிப்படையாக வைத்து இந்தத் தொகுதி மறுவரையறையை உடனடியாக நடத்த மத்திய அரசு புதிய திருத்தத்தைக் கொண்டுவந்துள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அண்மையில் வெளியிட்ட விளக்கத்தில், "இந்த 50% தொகுதி அதிகரிப்பு மாதிரியின்படி, தமிழ்நாட்டின் நாடாளுமன்ற இடங்கள் தற்போதைய 39-லிருந்து சுமார் 59 ஆக உயரும் என்பதால் தென்மாநிலங்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை" என்று குறிப்பிட்டிருந்தார்.
இருப்பினும், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தென்மாநிலங்களை விட, மக்கள் தொகை அதிகம் உள்ள வடமாநிலங்களுக்கு இந்த மசோதாவால் கூடுதல் நாடாளுமன்ற இடங்கள் கிடைத்து அவர்களின் ஆதிக்கம் ஓங்கும் என்று தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.