மக்களுடன் முதல்வர்.. இன்று தலைமைச் செயலகத்தில் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை நேரில் பெறுகிறார் முதலமைச்சர் விஜய்!
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சர் தனிப்பிரிவில், இன்று பொதுமக்கள் நேரடியாக அளிக்கும் கோரிக்கை மனுக்களை முதலமைச்சர் விஜய் நேரில் பெற்று குறைகளைக் கேட்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் மற்றும் நீண்ட நாள் கோரிக்கைகளை அதிகாரத்துவத் தாமதங்களின்றி, நேரடியாகக் கேட்டு அறிந்து அவற்றிற்கு உடனுக்குடன் தீர்வு காண்பதே இந்த அதிரடி முயற்சியின் முக்கிய நோக்கமாகும்.
முதலமைச்சரால் நேரடியாகப் பெறப்படும் மனுக்கள் அனைத்தும் முன்னுரிமை அடிப்படையில் அந்தந்தத் துறைச் செயலாளர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படும். மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து உரிய ஆய்வு செய்யப்பட்டு, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தகுதியான கோரிக்கைகளுக்குத் தீர்வு காணப்படுவதை முதலமைச்சரின் தனிப்பிரிவு நேரடியாகக் கண்காணிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் விஜய் நேரடியாக மனுக்களைப் பெறுகிறார் என்ற தகவல் வெளியானதைத் தொடர்ந்து, இன்று காலை முதலே சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள், தங்களது கோரிக்கை மனுக்களுடன் தலைமைச் செயலக வளாகத்தில் நீண்ட வரிசையில் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
மாநிலத்தில் நிர்வாகப் பொறுப்பேற்றது முதல் பல்வேறு அதிரடித் திட்டங்களையும், அரசுத் துறை செயல்பாடுகளுக்கான மாதாந்திர ஆய்வுக் கூட்டங்களையும் நடத்தி வரும் முதலமைச்சர் விஜய், நேரடியாக மக்களிடம் மனுக்களைப் பெறத் தொடங்கியுள்ளது பொதுமக்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.