போதையில் சீரழியும் முதல்வர் தொகுதி... 40 நாளில் 3வது மரணம்... போதை ஊசி செலுத்திக்கொண்ட 20 வயது இளைஞர் உயிரிழப்பு!
முதல்வர் விஜய் போட்டியிட்டு வெற்றிப்பெற்ற திருச்சி தொகுதியில் மட்டுமே கடந்த 40 நாட்களில் 3 பேர் போதை ஊசி செலுத்திக் கொண்டதால் உயிரிழந்துள்ள சம்பவம் திருச்சியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்திலேயே திருச்சியில் போதைக்கு அடிமையான இளைஞர்கள் அதிகளவில் இருப்பதாக தொகுதி மக்கள் புலம்புகின்றனர். போதையில் திருச்சி சிறுவர்கள் போலீசாரை அரிவாளால் தாக்கிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஆட்சி மாறிய பின்னரும் திருச்சியில் போதைப் பொருட்களின் புழக்கம் அதிகரித்திருப்பதாக புலம்புகின்றனர்.
இந்நிலையில் திருச்சி புத்தூர் அருகே போதை ஊசி செலுத்திக் கொண்ட சஞ்சய் (20) என்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. திருச்சியில் கடந்த சில வாரங்களில் போதை ஊசி பழக்கத்தால் நிகழும் 3-வது மரணம் இது என்பது குறிப்பிடத்தக்கது. போதைப்பொருள் பழக்கத்திற்கு இளைஞர்கள் அடிமையாகி வரும் அவலத்தின் தொடர்ச்சியாக இந்தத் துயரச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
திருச்சி புத்தூர் அருகே உள்ள கல்லாங்காடு பகுதியைச் சேர்ந்த சஞ்சய் (20) என்ற இளைஞர், நேற்று இரவு போதை ஊசி செலுத்திக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அவர் தங்கியிருந்த இடத்தில் பரிதாபமாக உயிரிழந்து கிடந்துள்ளார். இது குறித்துத் தகவல் அறிந்த உள்ளூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சஞ்சய்யின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் நேற்று இரவு அதிகளவிலான போதை மருந்தை ஊசி மூலம் உடலில் செலுத்திக் கொண்டதால் உயிரிழந்தாரா அல்லது அவரது மரணத்திற்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி மாநகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சட்டவிரோத போதை மாத்திரைகள் மற்றும் போதை ஊசிகளின் புழக்கம் அதிகரித்திருப்பதை இந்தத் தொடர் மரணங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன.
கடந்த ஜூன் 8-ம் தேதி முதல் தற்போதைய ஜூலை 13-ம் தேதி வரையிலான குறுகிய 40 நாட்களில் மட்டும், திருச்சியில் போதை ஊசி பயன்படுத்தியதால் நிகழும் 3-வது மரணம் இதுவாகும். இந்தத் தொடர் உயிரிழப்புகளால் தங்களது பிள்ளைகளின் எதிர்காலம் குறித்துப் பெற்றோர்களும் பொதுமக்களும் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.
இளைஞரின் இந்தத் துயர மரணத்தைத் தொடர்ந்து, திருச்சியில் சட்டவிரோதமாகப் போதை ஊசி மருந்துகள் மற்றும் மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இன்றி போதை மாத்திரைகளை விற்பனை செய்யும் சமூக விரோதிகளைக் கண்டறியக் காவல் துறை தங்களது கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாகப் பார்மசிகள் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடும் கும்பலைக் குறி வைத்துத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுத் தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டுள்ளது.