காற்றில் பறந்த முதல்வர் உத்தரவு... அரசாணை அவமதிப்பு... சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் 3ம் இடத்திற்கு தள்ளப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து!
தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் மற்றும் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் மூன்றாவதாகப் பாடப்பட்டது சமூக ஆர்வலர்கள் மற்றும் தமிழ் அமைப்புகளிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மாநில அரசின் அரசாணைப்படி, தமிழ்நாட்டில் நடைபெறும் அரசு மற்றும் கல்வி நிறுவன விழாக்களின் தொடக்கத்தில் முதன்மையாகத் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும். ஆனால், இந்த இரண்டு பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாக்களிலும் அவ்விதி பின்பற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. இராதாகிருஷ்ணன் மற்றும் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் ஆகியோர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் 'வந்தே மாதரம்' பாடலுக்கு முதலிடம் கொடுக்கப்பட்டு, தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டது.
மாநில அரசின் தெளிவான வழிகாட்டுதல்களை மீறித் தமிழ்த்தாய் வாழ்த்தைப் பின்னுக்குத் தள்ளிய பல்கலைக்கழக நிர்வாகங்கள் மீது தவெக அரசு உரிய நடவடிக்கை எடுக்குமா எனச் சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.