அச்சச்சோ... மனசே பதறுது... புள்ளிங்கோ அட்டகாசம்... ஆபத்தை உணராமல் காவிரியில் இறங்கி செல்ஃபி எடுக்கும் கூட்டம்!
அந்தந்த நிமிஷத்து சந்தோஷம் என்பது போல எல்லாமே சாகசங்கள் நிறைந்த வாழ்க்கையாக மாறிக் கொண்டிருக்கிறது. நின்றால், நடந்தால், ஓடினால் என யார் எது செய்தாலும், எங்கே சென்றாலும் செல்ஃபி மோகம் கடந்த தலைமுறை மக்களையும் பாடாய் படுத்திக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், ஆபத்தை உணராமல் காவிரியாற்றில் இறங்கி செல்ஃபி எடுத்து பதற செய்கிறார்கள் இளைஞர்கள்.
மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 1.70 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், ஆபத்தை உணராமல் இளைஞர்கள் காவிரி ஆற்றில் இறங்கி குளிப்பதும், செல்ஃபி புகைப்படங்களை எடுத்து அலட்சியமாக சாகசங்களில் ஈடுபடுவதும், ரீல்ஸ் ரெக்கார்டு செய்வதுமாக பதற செய்து கொண்டிருக்கிறார்கள்.
கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, அங்குள்ள அணைகள் நிரம்பியதையடுத்து காவிரியில் உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தன் காரணமாக, கடந்த 30-ம் தேதி அணை முழு கொள்ளவை எட்டியது. அணைக்கு வந்து கொண்டிருக்கும் 1,70.500 கன அடி நீர் முழுவதும் அப்படியே, காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டிஎம்சி-யாகவும் உள்ளது. அணையின் 16 கண் மதகு பகுதியில் பாறைகள் மீது நீர் கரைபுரண்டு செல்வதைக் காண, ஏராளமான மக்கள் திரண்டு வருகின்றனர். அவர்கள் மேட்டூர் அணையையும் அதிலிருந்து வெளியேறும் வெள்ளத்தையும் ரசித்து புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்துக் கொள்கின்றனர்.
அணையில் இருந்து அதிககளவில் நீரை வெளியேற்ற வாய்ப்புள்ளதால். மேட்டூரில் இருந்து எடப்பாடி செல்லும் பூலாம்பட்டி பிராதன சாலை மூழ்கும் நிலை உள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அப்பகுதி சாலையில் கான்கீரிட் தடுப்புகளை வைத்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், அனல் மின் நிலையத்தில் இருந்து சாம்பல் ஏற்றிச் செல்லும் லாரிகள், பள்ளி வாகனங்கள், அரசுப் பேருந்துகள் ஆகியவை அவ்வழியே செல்வது நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை காவிரி கிராஸ் வழியாக இரு சக்கர வாகனங்களில் பள்ளிக்கு அழைத்துச் செல்கின்றனர். சாம்பல் ஏற்றிச் செல்லும் லாரிகளை, அனல் மின் நிலைய வளாகம் வழியாக இயக்க பொறியாளர்கள் ஆலோசித்து வருகின்றனர். அதேபோல், அனல் மின் நிலைய அதிகாரிகள் அனுமதித்தால், அனல் மின் நிலைய வளாகம் வழியாக பேருந்து இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோல்நாயக்கன்பட்டி, சங்கிலி முனிப்பன் கோயில், பொறையூர் உள்ளிட்ட பகுதியில் விவசாய நிலங்களில் நீர் தேங்கியுள்ளது. இதனால் அறுவடைக்கு தயாரான பருத்தி, நிலக்கடலை உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
சேலம் மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து, ஆற்றில் இறங்கவோ, செல்ஃபி எடுக்கவோ தடை விதித்துள்ளது. ஆனால், சின்னகாவூர் பகுதியில் காவிரி ஆற்றின் கரை வழியாக இளைஞர்கள் ஆற்றில் இறங்கி குளிப்பதும், செல்ஃபி எடுப்பதும், மீன் பிடிப்பதும், கால்களை நீரில் நனைப்பதுமாக ஆபத்தை உணராமல் பல்வேறு செயல்களில் ஈடுபட்டுவருகின்றனர். இதனால் நீரில் மூழ்கி உயிரிழக்கும் அபாயம் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, கூடுதல் போலீஸாரை நியமித்து, காவிரி கரையோரத்தில் இளைஞர்கள், பொதுமக்கள் செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.