undefined

மரண ஓலம்... கொத்து கொத்தாக மண்ணில் புதைந்த மக்கள்... காங்கோ நிலச்சரிவில் சிக்கி 200 பேர் பலி!

 

கிழக்கு ஆப்பிரிக்க நாடான காங்கோவில்ஏராளமான கனிம சுரங்கங்கள் உள்ளன. அங்குள்ள ருபாயா நகரில் அமைந்துள்ள கோல்டான் கனிம சுரங்கத்தில் கோர விபத்து நிகழ்ந்துள்ளது. சுரங்கம் அமைந்துள்ள பகுதியில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வந்தது. இதன் காரணமாகச் சுரங்கத்திற்கு அருகே திடீரென நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவு ஏற்பட்ட சமயத்தில் சுரங்கப் பணியாளர்கள் மட்டுமின்றி, அங்கு வியாபாரம் செய்து கொண்டிருந்தவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என ஏராளமானோர் அப்பகுதியில் இருந்துள்ளனர். அவர்கள் அனைவரும் மண்ணுக்குள் புதையுண்டதாகத் தெரிகிறது.

இந்த விபத்தில் இதுவரை சுமார் 200 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பலர் மண்ணுக்குள் சிக்கியிருக்கலாம் என்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. காங்கோவில் சுரங்க விபத்துகள் என்பது தொடர்கதையாகி வருகிறது: இதே ருபாயா நகரில் உள்ள சுரங்கத்தில் கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட விபத்தில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இந்தச் சுரங்கப்பகுதி தற்போது எம்-23 (M-23) எனப்படும் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால் அங்கு மீட்புப் பணிகளை மேற்கொள்வதிலும், முறையான பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றுவதிலும் கடும் சவால்கள் நிலவுகின்றன.

இந்தச் சுரங்கத்தில் வெட்டி எடுக்கப்படும் 'கோல்டான்' (Coltan) என்ற கனிமம், நவீன மின்னணு சாதனங்களான ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகளில் பயன்படுத்தப்படும் மின்தேக்கிகள் தயாரிக்க மிக அவசியமான ஒன்றாகும். உலகளாவிய தேவை அதிகமாக இருப்பதாலேயே, ஆபத்தான சூழலிலும் மக்கள் இங்குப் பணிகளில் ஈடுபடுகின்றனர்.