மரண ஓலம்.. குவியல் குவியலாக சடலங்கள்... வெனிசுலாவில் அவசரநிலை பிரகடனம்!
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் நேற்று மாலை அடுத்தடுத்து தாக்கிய சக்தி வாய்ந்த இரட்டை நிலநடுக்கங்கள் ஒட்டுமொத்த நாட்டையும் நிலைகுலைத்துப்போட்டுள்ளன. தலைநகர் காரகாஸ் உட்படப் பல மாகாணங்களில் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் சீட்டுக்கட்டுகளைப் போலச் சரிந்து விழுந்ததால், அந்நாட்டில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் மற்றும் சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள முதற்கட்டத் தகவல்களின்படி, இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள் ஆயிரத்தைத் தாண்டக்கூடும் எனப் பலத்த அச்சம் எழுந்துள்ளது. வெனிசுலாவின் வடமேற்கு மற்றும் மத்தியப் பகுதிகளை மையமாகக் கொண்டு, இதுவரை கண்டிராத அளவுக்கு மிகக் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
உள்ளூர் நேரப்படி நேற்று மாலை 6:04 மணிக்கு முதலில் 7.2 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவில் பதிவாகி வெறும் 39 வினாடிகளே ஆன நிலையில், அடுத்ததாக 7.5 ரிக்டர் அளவில் அதைவிடப் பெரிய முதன்மை நிலநடுக்கம் தாக்கியது.
இந்த அதிர்வுகள் அண்டை நாடுகளான கொலம்பியா மற்றும் பிரேசிலின் அமேசான் பகுதிகள் வரை உணரப்பட்டதால் அங்கும் மக்கள் கட்டிடங்களை விட்டு அவசரமாக வெளியேறினர். தலைநகர் காரகாஸின் அல்தாமிரா பகுதியில் இருந்த 22 அடுக்கு மாடிகளைக் கொண்ட பிரம்மாண்ட குடியிருப்பு கட்டிடம் ஒன்று முற்றிலும் இடிந்து தரைமட்டமாகியுள்ளது.
வெனிசுலாவின் தற்காலிக அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் இன்று காலை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவலின்படி, முதற்கட்டமாக 32 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 700-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள லா குவைரா பகுதியை "பேரழிவு மண்டலமாக" அதிபர் அறிவித்துள்ளார். அங்குள்ள விபரங்கள் மற்றும் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் அதிகாரப்பூர்வ பலி எண்ணிக்கை இன்னும் முழுமையாகத் தெரியவில்லை. இருப்பினும், இடிபாடுகளுக்குள் பல்லாயிரக்கணக்கான மக்கள் சிக்கியிருக்கலாம் என்பதால், பலி எண்ணிக்கை 1,000 முதல் 10,000 வரை உயர 39% முதல் 41% வரை வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து காரகாஸ் நகரின் மெட்ரோ ரயில் சேவைகள் மற்றும் இயற்கை எரிவாயு இணைப்புகள் வெடிப்பு விபத்துகளைத் தவிர்க்கும் பொருட்டு உடனடியாகத் துண்டிக்கப்பட்டுள்ளன.
தலைநகரின் முக்கிய சர்வதேச விமான நிலையமான சிமோன் பொலிவர் விமான நிலையம் பலத்த சேதமடைந்துள்ளதால் அனைத்து விமானச் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. தற்போது ராணுவம் மற்றும் சர்வதேச மீட்புக் குழுவினர் இடிபாடுகளை அகற்றி, உயிருடன் இருப்பவர்களை மீட்கும் பணியில் விடிய விடியத் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.