இன்றுடன் காலக்கெடு நிறைவு.. பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க மறக்காதீங்க - பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை!

 

புதிதாகப் பிறந்த குழந்தைகளின் பிறப்பை முறையாகப் பதிவு செய்வதுடன், சான்றிதழில் பெயர் சேர்க்கப்படாதவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துவத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான கால அவகாசம் இன்றுடன் (செப்டம்பர் 26, 2026) நிறைவடைகிறது.

கடந்த 27.11.2011-க்கு முன்னர், அதாவது 15 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்து, பிறப்புப் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள போதிலும், இதுவரை பெயர் பதியப்படாத பதிவுகளுக்குச் சான்றிதழில் பெயர் சேர்ப்பதற்கான இறுதி நாளாக இன்றைய தினம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கல்விச் சான்று, ஓட்டுநர் உரிமம் அல்லது ஏதாவது தொடர்புடைய ஐடி கார்டு ஆகியவற்றில் ஏதேனும் ஒரு ஆவணத்தைச் சமர்ப்பித்துச் சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் பெயரைச் சேர்த்துக் கொள்ளலாம்.

குழந்தை பிறந்து 1 வருடத்திற்குப் பின்னர் மற்றும் 15 வருடங்களுக்குள் தாமதமாகப் பெயர் சேர்க்க ரூ. 200 கட்டணம் செலுத்த வேண்டும். பெற்றோர் எழுத்துப்பூர்வமாக உறுதிமொழி அளித்து இந்தக் கட்டணத்தைச் செலுத்திப் பெயரைச் சேர்த்துக் கொள்ளலாம். இதுவே இறுதி வாய்ப்பு எனவும், இதன் பின்னர் கால அவகாசம் நீட்டிக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெயர் சேர்க்க விண்ணப்பிக்க வேண்டிய அலுவலகங்கள்: கிராம நிர்வாக அலுவலகம் (பிறப்பு இறப்பு பதிவாளர்), பேரூராட்சி அலுவலகம் (பிறப்பு இறப்பு , பதிவாளர்), நகராட்சி அலுவலகம் (பிறப்பு இறப்பு பதிவாளர்), மாநகராட்சி அலுவலகம் (பிறப்பு இறப்பு பதிவாளர்), ஆரம்ப சுகாதார நிலையங்கள் (சுகாதார ஆய்வாளர்கள்)