இன்றுடன் அவகாசம் முடிகிறது... யுஜிசி நெட் (UGC NET 2026) தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை இதோ!

 

இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் ஆவதற்கும், இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகை பெறுவதற்கும் தகுதிபெற வேண்டிய மிக முக்கியமான தேசிய தகுதித் தேர்வான ‘யுஜிசி நெட்’ தேர்வின் ஜூன் மாத அமர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான ஆன்லைன் காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது.

இதுவரை விண்ணப்பிக்காத தகுதியுள்ள முதுகலை பட்டதாரி மாணவர்கள், இன்று இரவு 11:50 மணிக்குள் தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பித்து, கட்டணத்தையும் செலுத்தி முடிக்க வேண்டும் என தேசிய தேர்வுகள் முகமை அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.

மத்திய கல்வி அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி, தேசிய தேர்வுகள் முகமை ஆண்டுக்கு இரண்டு முறை (ஜூன் மற்றும் டிசம்பர்) இந்த நெட் தேர்வை கணினி வழியிலான பொதுத் தேர்வாக நடத்தி வருகிறது. நடப்பு 2026-ஆம் ஆண்டு ஜூன் மாத அமர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த சில வாரங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், அதற்கான இறுதி நாள் இன்றாகும். தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://ugcnet.nta.nic.in/ என்ற முகவரியில் தங்களது சுயவிவரங்கள் மற்றும் கல்விச் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம். இன்று இரவு 11:50 மணிக்கு மேல் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்திற்கான லிங்க் மற்றும் தேர்வுக் கட்டணம் செலுத்துவதற்கான வசதி முற்றிலும் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் தங்களது ஆன்லைன் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் போது ஏதேனும் தவறுகள் செய்திருந்தால், பதற்றமடையத் தேவையில்லை. விண்ணப்பங்களில் உள்ள பிழைகளைத் திருத்துவதற்காகத் தேசிய தேர்வுகள் முகமை பிரத்யேகமாக 'விண்ணப்பத் திருத்தக் காலத்தை' அறிவித்துள்ளது.

அதன்படி, விண்ணப்பதாரர்கள் தங்களின் பெயர், பிறந்த தேதி, சாதிப் பிரிவு, தேர்வு எழுத விரும்பும் பாடம் மற்றும் தேர்வு மைய நகரங்கள் போன்றவற்றில் ஏதேனும் திருத்தங்கள் மேற்கொள்ள விரும்பினால், அதற்கு வரும் மே 26-ஆம் தேதி முதல் மே 28-ஆம் தேதி வரை மூன்று நாட்கள் ஆன்லைனில் கால அவகாசம் வழங்கப்படும். இந்தத் திருத்தக் காலத்திற்குப் பிறகு வரும் எந்தவொரு கோரிக்கையும் எக்காரணம் கொண்டும் பரிசீலிக்கப்பட மாட்டாது என என்டிஏ திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

யுஜிசி நெட் தேர்வானது மொத்தம் இரண்டு தாள்களைக் கொண்டதாக, ஒரே அமர்வாக 3 மணி நேரம் நடைபெறும். தாள் 1 (Paper 1): பொதுவான கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சித் திறன் சார்ந்த 50 வினாக்களைக் கொண்டிருக்கும்.

தாள் 2 (Paper 2): விண்ணப்பதாரர்கள் முதுகலைப் படிப்பில் தேர்ந்தெடுத்த முதன்மைப் பாடம் சார்ந்த 100 வினாக்களைக் கொண்டிருக்கும். அனைத்து வினாக்களும் கொள்குறி வகை முறையில் அமையும். இத்தேர்வில் நெகட்டிவ் மதிப்பெண்கள் (No Negative Marking) கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.