கெடு முடியப்போகுது.. போர் நிறுத்தத்திற்கு ஈரானின் '10 கட்டளைகள்'! என்ன செய்யப் போகிறார் ட்ரம்ப்?!
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலானப் போர் நிறுத்தம் தொடர்பாக, பாகிஸ்தான் போன்ற மத்தியஸ்தர்கள் மூலம் ஈரான் தனது 10 அம்ச நிபந்தனைப் பட்டியலை அமெரிக்காவிடம் சமர்ப்பித்துள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்வைத்துள்ள அமைதி ஒப்பந்தத்திற்குப் பதிலாக, ஈரான் தனது தரப்பிலிருந்து விதித்துள்ள சில அதிரடி நிபந்தனைகள் சேர்க்கப்பட்டுள்ளன.
"எதிர்காலத்தில் ஈரான் மீது மீண்டும் எந்தவொரு ராணுவத் தாக்குதலும் நடத்தப்படாது" என்ற சர்வதேச அளவிலான அதிகாரப்பூர்வ உத்தரவாதத்தை அமெரிக்கா அளிக்க வேண்டும். ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள அனைத்துப் பொருளாதாரத் தடைகளையும் அமெரிக்கா உடனடியாக முழுமையாக நீக்க வேண்டும்.
வளைகுடா நாடுகளிலிருந்து ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் ஒவ்வொரு வெளிநாட்டுக் கப்பலுக்கும் தலா 2 மில்லியன் டாலர் (சுமார் ₹16.6 கோடி) 'ஹார்முஸ் கட்டணமாக' ஈரான் வசூலிக்கும். ஈரானின் கடல் எல்லைக்குள் அமெரிக்கக் கடற்படைக் கப்பல்கள் நுழைவதைத் தவிர்க்க வேண்டும்.
அதிபர் டிரம்ப் ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க விதித்த காலக்கெடு இன்னும் 24 மணிநேரத்தில் முடிவடைய உள்ளது. காலக்கெடு முடிந்தால் ஈரானின் உள்கட்டமைப்புகளைத் தகர்ப்போம் என அமெரிக்கா எச்சரித்துள்ள நிலையில், "நிபந்தனைகளை ஏற்றால் மட்டுமே போர் நிறுத்தம்" என ஈரான் பிடிவாதமாக உள்ளது.
ஒவ்வொரு கப்பலுக்கும் 2 மில்லியன் டாலர் கட்டணம் என்பது சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையை வரலாறு காணாத அளவிற்கு உயர்த்தும் எனப் பொருளாதார நிபுணர்கள் அஞ்சுகின்றனர். ஈரானின் இந்தத் திட்டத்தை அமெரிக்கா ஏற்குமா அல்லது மீண்டும் ஒரு பெரும் தாக்குதலைத் தொடங்குமா என்பது இன்னும் சில மணிநேரங்களில் தெரிந்துவிடும்.