“திமுக தனக்குத்தானே பள்ளம் தோண்டி விழுந்துள்ளது... சரிவு காலம் ஆரம்பித்துவிட்டது” - வைகோ விமர்சனம்!
தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுக தனக்குத்தானே பள்ளம் தோண்டி அதில் விழுந்துவிட்டதாகவும், அக்கட்சிக்குச் சரிவு காலம் தொடங்கிவிட்டதாகவும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் இந்தக் கருத்துக்களைக் கூறினார்.
தொகுதி மறுவரையறை மசோதாவுக்குத் திமுக ஆதரவு அளித்துள்ள நிலையில், இது குறித்துப் பேசிய வைகோ, "தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுக தனக்குத்தானே பள்ளம் தோண்டி, அதில் தானே விழுந்துள்ளது. திமுகவிற்குப் பெரும் சரிவு காலம் தொடங்கிவிட்டது" எனத் தெரிவித்தார்.
யார் யாரைப் பார்த்தால் என்ன வரும் எனக் கேள்வி எழுப்பிய அவர், வரும் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வெல்லும் எனக் குறிப்பிட்டார். மேலும், இந்த ஐந்து ஆண்டுகள் மட்டுமல்லாமல் அடுத்த ஐந்தாண்டுகளும் விஜய் தான் தமிழ்நாட்டின் முதல்வராக இருப்பார் என்றும், தேசிய அளவில் அவரது கட்சி சிறப்பாக வளரும் என்றும் அவர் கூறினார்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட்ட விவகாரம் குறித்துக் கருத்து தெரிவித்த வைகோ, அது மிகுந்த வேதனையையும் ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் தருவதாகக் குறிப்பிட்டார்.
தனது உடல்நிலை மிகவும் சோர்வடைந்துள்ளதால் ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிவித்த வைகோ, அடுத்த இரண்டு மாதங்களுக்குத் தன்னை யாரும் விழா நிகழ்ச்சிகளுக்கு அழைக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.