"திமுகவிற்கு பிபி எகிறத் தொடங்கிவிட்டது" - உதயநிதிக்கு தவெக பதிலடி!
சென்னை சட்டமன்றத்தில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சர் விஜயின் உணவுப் பழக்கம் மற்றும் உடைகள் குறித்து விமர்சனம் செய்திருந்த நிலையில், அதற்குத் தவெக தகவல் தொழில்நுட்ப அணி தனது எக்ஸ் தளத்தில் கடுமையான வார்த்தைகளால் காரசாரமான பதிலடியைக் கொடுத்துள்ளது.
தவெக அரசின் ஆளுநர் உரையில் இடம்பெற்ற கொள்கை அறிவிப்புகள் மற்றும் தலைவர்களின் பெயர்களைப் பார்த்து "ஃப்ராடு கட்சி திமுகவிற்கு பிபி எகிறத் தொடங்கிவிட்டது" என்று தவெக ஐடி விங் சாடியுள்ளது.
சட்டமன்றத்தில் இன்று தவெக அரசு தாக்கல் செய்த ஆளுநர் உரையைத் தவெக ஐடி விங் வெகுவாகப் பாராட்டியுள்ளதுடன், திமுகவின் விமர்சனங்களைத் தவிடுபொடியாக்கும் வகையில் பதிவிட்டுள்ளது.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டசபை தொடங்கியதுமே எதிர்க்கட்சித் தலைவருக்குப் பாயிண்ட் கிடைக்காமல் பதறத் தொடங்கி விட்டார். பேரறிஞர் அண்ணாவின் பொன்மொழியுடன் தொடங்கி தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர், அண்ணல் அம்பேத்கர், வீரமங்கை வேலுநாச்சியார், மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் ஆகியோரின் பெயர்கள் ஆளுநர் உரையில் இடம் பெற்றதைக் கண்டு திமுகவிற்கு உதறல் எடுத்து விட்டது.
தவெக அரசின் உச்சபட்ச அறிவிப்பாக, சமூக நீதிக் கணக்கீட்டு ஆய்வாகச் சாதிவாரிக் கணக்கீட்டு ஆய்வு நடத்தப்படும் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பு வெளியானதில் ஒட்டுமொத்தத் திமுகவிற்கும் உள்நாக்கு வரை உலர்ந்துபோய் விட்டது. இதை டிவியில் பார்த்தபோதே கொளத்தூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. மு.க.ஸ்டாலினுக்கு வேர்க்கத் தொடங்கி இருக்கும் எனத் தவெக விமர்சித்துள்ளது.
திமுவினர் தவெக அரசை விமர்சிப்பதைக் கேலி செய்துள்ள தவெக ஐடி விங், கடந்த கால திமுக ஆட்சியை 'Sick ஆன ஆட்சி' என்று வர்ணித்துள்ளது. "நீதிக்கட்சி தொடங்கி, பெருந்தலைவர் காமராஜர், எம்.ஜி.ஆர். ஆகியோரால் மேம்படுத்தப்பட்ட மதிய உணவுத் திட்டத்தை ஒட்டியே, காலை உணவுத் திட்டம் என்ற பெயரில் ஸ்டிக்கர் ஒட்டியவர்கள் தான் இந்த திமுகவினர். ஊழலில் மூழ்கித் திளைத்த இவர்களெல்லாம் ஸ்டிக்கர் ஆட்சி என்று பேசுவதுதான் சிரிப்பிலும் பெரிய சிரிப்பு."
நிதி விவகாரங்கள் குறித்து திமுகவினர் விமர்சிப்பதற்குப் பதிலளித்துள்ள தவெக, "பார்ட்டி ஃபண்ட் என்ற பெயரில் ஃபேமிலி ஃபண்ட் சேர்த்தவர்களுக்கு, இனி அது கிடைக்காது என்பதால் பிதற்றத் தொடங்கி விட்டனர். பா.ஜ.க.விடம் பயந்து நடுங்கி அடிபணிந்து கிடக்கும் திமுக, நம்மைப் பார்த்து அவதூறாகப் பேசுவது ஒன்றும் புதிதல்ல" என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும், சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்கத் தகுதியான டிஜிபியைக் கூடப் போட வக்கற்று இருந்த திமுக அரசால் எடுக்க முடியாத கடும் நடவடிக்கைகளை மக்கள் விரும்பும் முதலமைச்சர் விஜய் எடுத்து வருகிறார் என்றும், இத்தகைய நல்லாட்சி மீது அவதூறுகளை அள்ளி வீசினால் வரும் நாட்களில் மக்கள் மன்றத்தில் திமுக முற்றாக மறக்கப்படப் போவது உறுதி என்றும் தவெக ஐடி விங் தனது பதிவில் மிக ஆக்ரோஷமாக எச்சரித்துள்ளது.