திமுக விதைத்த வினைகளை மேன்மேலும் அறுவடை செய்யப் போகிறது" – தவெக பதிலடி!
திமுக அரசியலை வியாபாரமாகச் செய்து வரும் ஒரு 'வெண்டிங் மெஷின்' என்றும், ஜனநாயக பண்புகள் இன்றி செயல்படும் திமுக தான் விதைத்த வினைகளுக்கான விளைவுகளை விரைவில் அனுபவிக்கும் என்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் தகவல் தொழில்நுட்ப அணி கடுமையாகச் சாடியுள்ளது.
திமுக தலைவரின் சமீபத்திய அறிக்கைகள் மற்றும் திமுக நிர்வாகிகளின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தவெக ஐடி விங் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) பக்கத்தில் இந்த காரசாரமான பதிலடியைப் பதிவு செய்துள்ளது.
அரசியலை வியாபாரமாக மட்டுமே பார்க்கும் திமுக, தனது கட்சியின் ஆபாசப் பேச்சாளர்களுக்கு வன்மத்தை ஊட்டி வளர்த்து வருகிறது. கேட்டால் அதை 'எதிர்க்கட்சி ஜனநாயகம்' என்று கூறி எகத்தாளம் பேசுகிறது. மேல்மட்டம் முதல் கீழ்மட்டம் வரை அநாகரிக அரசியல் செய்து வரும் திமுக, ஆட்சி அதிகார மமதையால் ஜனநாயகப் பண்புகளே இன்றி செயல்படுகிறது. அதற்கான விளைவுகளை இப்போது சந்தித்து வரும் நிலையிலும், காவல்துறையையே பகிரங்கமாக மிரட்டும் வகையில் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு வருகிறார்.
அடிப்படைப் புரிதல்கூட இல்லாமல் வழக்கு தொடர்ந்ததால், "ஒழுங்காகப் படித்துவிட்டு வாருங்கள்" என்று உச்சநீதிமன்றம் ஓங்கி அடித்ததை மறந்துவிட்டு, திமுகவினர் ஊருக்கு உபதேசம் செய்யத் தொடங்கிவிட்டனர்.
"சத்திய ஆட்சி எது? சாத்தானின் ஆட்சி எது? என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரியும்" என்று குறிப்பிட்டுள்ள தவெக, நீதிநெறியை மறந்து செயல்படும் திமுக, தாம் விதைத்து வரும் தீய வினைகளை விரைவில் மேன்மேலும் அறுவடை செய்யப் போவது உறுதி என எச்சரித்துள்ளது.