“தி.மு.க. போராட்டம் அர்த்தமற்றது... பெண்களுக்கு எதிரானது!” - கோவையில் டெல்லி முதல்வர் ரேகா குப்தா பேட்டி!

 

கோவையில் இரண்டு நாட்களாகத் தீவிரத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா, தி.மு.க. அரசின் செயல்பாடுகளையும், தொகுதி மறுவரையறைக்கு எதிரான அவர்களது போராட்டத்தையும் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார்.

நேற்று கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தொகுதி மறுவரையறை மற்றும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு ஆகியவை பெண்களுக்குப் மிகப்பெரிய அளவில் சாதகமானவை. ஆனால், தி.மு.க. இதனை எதிர்த்துப் போராடுவது அர்த்தமற்றது. இதன் மூலம் தி.மு.க.வினர் பெண்கள் முன்னேறக் கூடாது என்று நினைக்கிறார்கள் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

தமிழகத்தில் தற்போதைய அரசாங்கம் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற ஒன்றாக உள்ளது. திருச்சியில் தி.மு.க.-வின் இலவச கூப்பன் விவகாரத்தில் ஒரு பெண் உயிரிழந்திருப்பது வேதனையளிக்கிறது. அந்தப் பெண்ணை தி.மு.க.வினர் இழிவுபடுத்தியுள்ளனர். ஒட்டுமொத்தப் பெண்களும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டிய தருணம் இது.

தமிழகத்தில் தொகுதி மறுவரையறை விவகாரம் பெரும் அரசியல் விவாதமாக மாறியுள்ள நிலையில், டெல்லி முதல்வரின் இந்தப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.