நாய் குறுக்கே வந்ததால் விபரீதம்... கார் கவிழ்ந்து 3 இளைஞர்கள் உயிரிழப்பு!
ராஜஸ்தான் மாநிலத்தில் நாய் குறுக்கே வந்ததால் ஏற்பட்ட கோர விபத்தில், மூன்று இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜின்ஜுனு மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள், ஒரு ஆன்மிக நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு ஒரே காரில் தங்களது சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். கார் மண்ட்ரிலா (Mandrella) பகுதி வழியாகச் சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாகச் சாலையில் நாய் ஒன்று குறுக்கே வந்துள்ளது.
குறுக்கே வந்த நாயின் மீது மோதாமல் இருக்க, காரை ஓட்டிய இளைஞர் திடீரெனத் திருப்பியுள்ளார். இதில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையில் தாறுமாறாக ஓடித் தலைகுப்புறக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின் வேகம் அதிகமாக இருந்ததால், காரில் பயணம் செய்த விஜய், கவுரவ், சுனில் ஆகிய மூன்று இளைஞர்களும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த ஜிஜேந்திரா என்ற மற்றொரு இளைஞரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்துத் தகவல் அறிந்த காவல்துறையினர், உயிரிழந்தவர்களின் உடல்களைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெடுஞ்சாலைகளில் விலங்குகள் குறுக்கிடுவதால் ஏற்படும் விபத்துகள் சமீபகாலமாக அதிகரித்து வருவது வாகன ஓட்டிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.