சொந்த வீடு கனவு இனி ஈஸி... கூட்டுறவு வங்கிகளில் வீட்டுக் கடன் உச்சவரம்பு ரூ.1 கோடியாக உயர்வு - அமைச்சர் காந்திராஜ் அறிவிப்பு!
தமிழ்நாட்டில் நகர்ப்புற மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வசசிக்கும் மக்களின் சொந்த வீடு கட்டும் கனவை நனவாக்கும் வகையிலும், தடையற்ற நிதி உதவிகளை வழங்கும் நோக்கத்துடனும் நகரக் கூட்டுறவு வங்கிகள் மற்றும் நகரக் கூட்டுறவு கடன் சங்கங்களில் தனிநபர் வீட்டுக் கடன் மற்றும் வீட்டு அடமானக் கடன்களுக்கான அதிகபட்ச உச்சவரம்புகளை உயர்த்தித் தமிழ்நாடு கூட்டுறவுத் துறை அமைச்சர் வ. காந்திராஜ் அறிவித்துள்ளார்.
ரூ.100 கோடிக்கு மேல் வைப்புத்தொகை நிலுவை கொண்ட நகரக் கூட்டுறவு வங்கிகளில் தனிநபருக்கான அதிகபட்ச வீட்டுக் கடன் உச்சவரம்பு ரூ.1.40 கோடி வரை உயர்த்தி வழங்க ரிசர்வ் வங்கியின் நடைமுறைகளின்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நகரக் கூட்டுறவு கடன் சங்கங்கள் ரூ.100 கோடிக்குக் குறைவான வைப்புத்தொகை தனிநபருக்கான அதிகபட்சக் கடன் உச்சவரம்பு ரூ.60 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே போன்று ரூ.100 கோடிக்கு மேல் வைப்புத்தொகை தனிநபருக்கான அதிகபட்சக் கடன் உச்சவரம்பு ரூ.1 கோடி வரை உயர்த்தப்பட்டுள்ளது.
பொதுமக்களின் மாதாந்திரத் தவணைச் சுமையைக் குறைக்கும் வகையில், வீட்டுக் கடன்கள் மற்றும் அடமானக் கடன்களைத் திருப்பிச் செலுத்தும் அதிகபட்ச கால அவகாசம் 20 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
நகரக் கூட்டுறவு வங்கிகள் மற்றும் கடன் சங்கங்கள் தங்களது கடன் கொள்கை மற்றும் துணைவிதிகளை உடனடியாக ஆய்வு செய்து, திருத்தங்களை மேற்கொண்டு மண்டலத் துணைப் பதிவாளரின் ஒப்புதலைப் பெற உத்தரவிடப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் உறுப்பினர்களின் கடன் தகுதி மற்றும் திருப்பிச் செலுத்தும் திறன் ஆகியவை உரிய முறையில் பரிசீலிக்கப்பட்டு விரைவாகக் கடன் வழங்கப்படும்.
தகுதியுடைய பொதுமக்கள் தங்களது முகவரிச் சான்று, வருமானச் சான்று மற்றும் சொத்து ஆவணங்களுடன் தங்களது அருகிலுள்ள நகரக் கூட்டுறவு வங்கிகள் அல்லது கடன் சங்கங்களை அணுகி இச்சலுகையைப் பெற்றுப் பயனடையலாம்.