முரசு புயல் எதிரொலி... 7 மாவட்ட கலெக்டர்களுக்கு பேரிடம் மேலாண்மைத் துறை அவசரக் கடிதம்!

 

வங்கக்கடலில் உருவாகியுள்ள முரசு புயல் காரணமாகத் தமிழகத்தின் 7 மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துமாறு பேரிடர் மேலாண்மைத் துறை மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் நீலகிரி மாவட்ட ஆட்சியர்களுக்கு இதுதொடர்பாகக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பேரிடர் காலங்களில் பின்பற்ற வேண்டிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைச் செயல்படுத்தவும், மாவட்ட நிர்வாகங்கள் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பின்படி, நவம்பர் 2ஆம் தேதி சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முரசு புயல் தெற்கு ஆந்திரப் பிரதேசக் கடற்கரையை நோக்கி நகர்ந்து, நவம்பர் 2ஆம் தேதி நள்ளிரவு முதல் நவம்பர் 3ஆம் தேதி அதிகாலை வரை கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழையின் தீவிரத்தைப் பொறுத்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பது குறித்து மாவட்ட நிர்வாகங்கள் தனியாக முடிவெடுக்கும். அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே பொதுமக்கள் நம்ப வேண்டும்.