தேர்தல் நடைமுறை விதிகள் இன்றுடன் முடிவு... அரசு நிர்வாகம் மீண்டும் வேகம்!

 

தமிழக சட்டமன்றத் தேர்தல் பணிகள் அனைத்தும் முழுமையாக நிறைவடைந்த நிலையில், மாநிலம் முழுவதும் அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள் இன்று (மே 6) மாலையுடன் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வருகின்றன. தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் அரசு நிர்வாகப் பணிகள் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்ப உள்ளன. குறிப்பாக, சென்னையில் தேர்தல் பணிகளுக்காக நியமிக்கப்பட்டிருந்த 20,000 ஊழியர்களும் உடனடியாகத் தங்களது பழைய மாநகராட்சிப் பணிகளுக்குத் திரும்புமாறு அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் புதிய அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ள சூழலில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில் புதிய அரசு விரைவில் பொறுப்பேற்க உள்ளது. இதற்கான ஆரம்பகட்டப் பணிகள் சென்னை தலைமைச் செயலகத்தில் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கோட்டையில் உள்ள முதலமைச்சர் அலுவலகம் மற்றும் அமைச்சர்களுக்கான அறைகளில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டு, வர்ணம் பூசுதல் மற்றும் தூய்மைப் பணிகள் போர்க்கால அடிப்படையில் முடுக்கி விடப்பட்டுள்ளன.

தேர்தல் விதிமுறைகள் விலக்கிக் கொள்ளப்படுவதால், புதிய முதலமைச்சர் பதவியேற்றவுடன் பல்வேறு முக்கியக் கோப்புகளில் கையெழுத்திடத் தயாராக உள்ளார். மேலும், அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டங்கள் இனி தடையின்றி நடைபெறும். சுமார் இரண்டு மாதங்களாக முடங்கியிருந்த தமிழக அரசு இயந்திரம், புதிய ஆட்சியின் கீழ் நாளை முதல் புதிய உற்சாகத்துடன் இயங்கத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.