நிச்சயதார்த்தம் முடிந்து ஊரெல்லாம் பத்திர்க்கை கொடுத்தாச்சு... மணமகனின் கொடூரச் செயலால் இளம்பெண் தற்கொலை!

 

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி பகுதியில், திருமணம் நிச்சயமாகியிருந்த இளம்பெண் ஒருவர், நிச்சயிக்கப்பட்ட மணமகனின் துரோகம் மற்றும் அத்துமீறிய செயலால் ஏற்பட்ட கடும் மன உளைச்சல் காரணமாக தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம், ஜான்சியைச் சேர்ந்த சாயா பவார் (24) என்ற இளம்பெண்ணிற்கும், மத்தியப் பிரதேச மாநிலம் ரைசேனைச் சேர்ந்த ஹர்ஷ் என்ற வாலிபருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயமாகியிருந்தது. 

இருவீட்டார் சம்மதத்துடன் பெற்றோர் பார்த்து நிச்சயித்திருந்த இந்த திருமணத்திற்கு இன்னும் இரண்டரை மாதங்களே இருந்த நிலையில், வீட்டில் திருமணப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன. 

இந்நிலையில் மணமகனாக நிச்சயிக்கப்பட்ட ஹர்ஷ், தானும் தனது காதலியும் நெருக்கமாக இருக்கும் நிர்வாண வீடியோக்களையும், புகைப்படங்களையும் வாட்ஸ்அப் மூலமாக சாயாவிற்கு அனுப்பியதாகக் கூறப்படுகிறது. 

சாயாவுடனான திருமணத்தை நிறுத்தி விட்டு, இந்த உறவை முறித்துக் கொள்வதற்காகவே ஹர்ஷ் திட்டமிட்டு இந்த செயலில் ஈடுபட்டுள்ளார். தனக்கு கணவராக திருமணத்திற்கு நிச்சயிக்கப்பட்ட நிலையில், மணமகனின் இந்தத் துரோக நடவடிக்கையாலும், அனுப்பப்பட்ட அதிர்ச்சியளிக்கும் காட்சிகளினாலும் மன உளைச்சலுக்கு ஆளான சாயா, தனது வீட்டின் மேல் தளத்தில் உள்ள அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

நடந்த சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த ஜான்சி நகரக் காவல் துறையினர், சாயாவின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சாயாவைத் தற்கொலைக்குத் தூண்டிய மணமகன் ஹர்ஷ் மீது வழக்குப் பதிவு செய்து உடனடியாக கைது செய்ய வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரும் உறவினர்களும் காவல் நிலையத்தை முற்றுகையிட்டுக் கோரிக்கை விடுத்துள்ளனர். 
-------------