திரையுலகமே கண்ணீர்... நாளை அரசு மரியாதையுடன் இறுதிசடங்கு: ஆஷா போஸ்லே மறைவு - ஒரு சகாப்தத்தின் மௌனம்!
இசைக்கு எல்லைகள் கிடையாது என்பார்கள். அந்த எல்லைகளைத் தனது குரலால் தகர்த்து எறிந்த இசைப் பேரரசி ஆஷா போஸ்லே இன்று மௌனமானார். லதா மங்கேஷ்கர் எனும் இமயத்தின் நிழலில் வளராமல், தனக்கென ஒரு தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கி, 92 ஆண்டுகள் இசை ரசிகர்களைத் தன் வசப்படுத்திய அந்த வசீகரக் குரல் இன்று காற்றில் கலந்தது.
மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் இன்று மதியம் 1:04 மணிக்கு அந்த மாரடைப்பு, கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயத் துடிப்பைச் சற்று நிறுத்திவிட்டது. "நீ பார்த்த பார்வை.." என நம்மை மெய்சிலிர்க்க வைத்தவர், இன்று நிரந்தரமாகக் கண்களை மூடிக்கொண்டார். அவரது மகன் ஆனந்த் போஸ்லே உறுதிப்படுத்திய இந்தச் செய்தி, இந்தியத் திரையுலகிற்குத் தீராத ஒரு துயரம்.
லதா மங்கேஷ்கர் ஒரு புனித நதியென்றால், ஆஷா போஸ்லே ஆர்ப்பரிக்கும் கடல். அக்கா லதாவைப் போலவே பாடாமல், தனக்கென ஒரு மாடர்ன் மற்றும் ஃபாஸ்ட் மெலடி பாணியை உருவாக்கினார். 12,000-க்கும் மேற்பட்ட பாடல்கள், 20-க்கும் மேற்பட்ட மொழிகள். இது வெறும் எண்கள் அல்ல, ஒரு மனித வாழ்நாளின் கடின உழைப்பு.
இளையராஜாவின் இசையில் அவர் பாடிய ‘செண்பகமே..’ இன்றும் கிராமத்துத் தெருக்களில் எதிரொலிக்கிறது. ரஹ்மானின் 'செப்டம்பர் மாதம்' இளசுகளின் தாளமாக உள்ளது. வித்யாசாகரின் இசையில் அவர் பாடிய 'கொஞ்ச நேரம்' இன்றும் காதலர்களின் விருப்பமான மெலடி.
நோபல் பரிசுக்கு நிகரான தாதா சாகேப் பால்கே விருது முதல் பத்ம விபூஷண் வரை அவர் பெறாத அங்கீகாரங்களே இல்லை. ஆனால், அவர் பெற்ற மிகப்பெரிய விருது ரசிகர்களின் கைதட்டல்களும், கண்ணீரும்தான். லதா மங்கேஷ்கர் மறைந்த போது "என் ஒரு பகுதி போய்விட்டது" என்றார் ஆஷா. இன்று ஒட்டுமொத்த இசை உலகமும் "எங்கள் உயிர்நாடியே போய்விட்டது" என அழுகிறது.
நாளை மாலை 4 மணிக்கு மும்பை சிவாஜி பூங்காவில், இந்தியத் திரையுலகின் ஜாம்பவான்கள் சூழ, முழு அரசு மரியாதையுடன் அந்த இசை நிலவின் இறுதிப் பயணம் நடைபெறவுள்ளது.