“ஈரான் மீது 'இனிமையான' இறுதித் தாக்குதல்..” 47 ஆண்டு காலப் பழிவாங்கல் - டிரம்ப் விடுத்த கடைசி எச்சரிக்கை!
அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டுப்படைகளுக்கும், ஈரானுக்கும் இடையிலான போர் ஒரு மாதத்தைக் கடந்துள்ள நிலையில், அதிபர் டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானின் புதிய மற்றும் நியாயமான ஆட்சியுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், அதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். எனினும், அவர் இரண்டு முக்கிய நிபந்தனைகளை விதித்துள்ளார்.
ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தி உடனடியாகப் போக்குவரத்திற்காகத் திறக்கப்பட வேண்டும். பேச்சுவார்த்தையில் விரைவில் ஒரு சுமுகமான உடன்பாடு ஏற்பட வேண்டும். இந்த நிபந்தனைகள் நிறைவேற்றப்படாவிட்டால், இதுவரை அமெரிக்கப் படைகளால் தொடப்படாத ஈரானின் அனைத்து மின் உற்பத்தி நிலையங்கள், எண்ணெய் கிணறுகள் மற்றும் கார்க் தீவு ஆகியவற்றை வெடிவைத்துத் தகர்த்து, அவற்றை முற்றிலுமாக அழிப்போம் என டிரம்ப் எச்சரித்துள்ளார்.
இந்தத் தாக்குதலை ஒரு 'இனிமையான இறுதித் தாக்குதல்' எனக் குறிப்பிட்டுள்ள டிரம்ப், இதற்கு ஒரு வரலாற்றுப் பின்னணியையும் கூறியுள்ளார். "கடந்த 47 ஆண்டு காலப் பயங்கரவாத ஆட்சியில், ஈரான் படுகொலை செய்த நமது அமெரிக்க வீரர்கள் மற்றும் பொதுமக்களின் மரணத்திற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக இது இருக்கும்" என்று அவர் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார். 1979-ம் ஆண்டு ஈரானியப் புரட்சிக்குப் பிறகு நிலவும் பகைமைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்தத் தாக்குதல் அமையும் என்பது டிரம்பின் வாதமாக உள்ளது.
பேச்சுவார்த்தை நடைபெறுவதைக் கருத்தில் கொண்டு, ஈரானின் மின் நிலையங்கள் மீதான தாக்குதலை 10 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அமெரிக்கா ஏற்கனவே அறிவித்திருந்தது. தற்போது அந்த அவகாசம் முடிய உள்ள நிலையில், டிரம்பின் இந்த 'இறுதி எச்சரிக்கை' வெளியாகியுள்ளது. இதனால் வளைகுடா பிராந்தியத்தில் மீண்டும் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன.