தவெக அரசின் முதல் பட்ஜெட்... மாற்றமா? தடுமாற்றமா? - முழுமையான அலசல்!
தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்ற 88 நாட்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த முதல் பட்ஜெட் , அரசுக்கான நிதி மேலாண்மை சவால்களுக்கும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கும் இடையிலான போராட்டத்தைப் பிரதிபலிக்கிறது.
'வெற்றி மடிக்கணினி திட்டம்' மூலம் கல்லூரி மாணவர்களுக்கு ரூ.2,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏழை மணப்பெண்களுக்கு 1 பவுன் (8 கிராம்) தங்கம் மற்றும் பட்டுச்சேலை வழங்கும் திட்டத்திற்கு ரூ.812 கோடியும், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்குத் 'தாய்மாமன் தங்க மோதிரம்' வழங்கும் திட்டத்திற்கு ரூ.560 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளை மேம்படுத்த 'பள்ளி நிறைவுத் திட்டம்' மூலம் ரூ.300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
தவெக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்ட மகளிருக்கான மாத உரிமைத்தொகை ரூ.2,500 உயர்த்தப்படும் என்ற முக்கிய திட்டம் இந்த பட்ஜெட்டில் இடம் பெறவில்லை. குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 6 இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கும் திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்படவில்லை. அரசுப் பேருந்துகளில் மகளிருக்கான முழுமையான இலவசப் பயணத் திட்ட அறிவிப்புகளும் விடுபட்டுள்ளன.
நிதி அமைச்சர் மரிய வில்சன் தனது உரையில், முந்தைய ஆட்சியில் இருந்து பெற்ற கடன்கள் மற்றும் நிதிப் பற்றாக்குறை காரணமாக மாநிலத்தின் நிதிநிலையைச் சீரமைக்கக் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் தேவைப்படும் என விளக்கமளித்துள்ளார்.
தற்போதைய பட்ஜெட்டில் சில முக்கியத் திட்டங்கள் தொடங்கப்பட்டிருந்தாலும், பெண்களுக்கான நேரடி பண உதவித் திட்டங்கள் தள்ளிப் போயிருப்பது மக்களிடையே கலவையான விமர்சனங்களை உருவாக்கியுள்ளது.