இன்று முதல் வேட்பு மனு தாக்கல் துவக்கம்! தமிழகத்தில் தேர்தல் திருவிழா ஆரம்பம்!
தமிழகத்தில் தேர்தல் திருவிழா இன்று முதல் ஆரம்பமாகிறது. இன்று முதல் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் துவங்குகிறது. இம்மாதம் 31ம் தேதி அமாவாசை வருவதால், அன்றைய தினம் பரவலாக நிறைய பேர் வேட்பு மனு தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக பிப்ரவரி 19ம் தேதி நடைபெற உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இதில் வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ல் நடைபெறும். அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் கொரோனா கட்டுப்பாடுகளுடன் தேர்தல் பிரச்சாரம் செய்யலாம் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தேர்தல் அட்டவணை
ஜனவரி 28- வேட்புமனு தாக்கல் துவக்கம்
பிப்ரவரி 4 - வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள்
பிப்ரவரி 5- வேட்புமனுக்கள் ஆய்வு
பிப்ரவரி 7- வேட்புமனு திரும்ப பெறுதல்
பிப்ரவரி 19 -வாக்குப்பதிவு
பிப்ரவரி 22 - வாக்கு எண்ணிக்கை
பிப்ரவரி 24 - வார்டு உறுப்பினர்களின் பதவியேற்பு
மார்ச் 2- மறைமுக தேர்தல் மேயர், துணை மேயர், நகராட்சி-பேரூராட்சிகளின் தலைவர் மற்றும் துணைத்தலைவர்கள் தேர்வு
தேர்தல் பணிகள் அனைத்தும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாளை வேட்புமனுத் தாக்கல் நடைபெற உள்ள நிலையில் நாளை மறுநாள் சனிக்கிழமையும் வேட்புமனு தாக்கல் செய்யலாம் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வாக்குப்பதிவு நேரம் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மாலை 5 முதல் 6 மணி வரை வாக்களிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.