சர்வதேச அங்கீகாரம் பெற்ற முதல் இந்தியத் துறைமுகம்... தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்திற்கு கூடுதல் சிறப்பு!

 

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் எரிசக்தி மேலாண்மை அமைப்பிற்கான ISO 50001:2018 சான்றிதழைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் இச்சான்றிதழைப் பெறும் இந்தியாவின் முதல் துறைமுகம் என்ற சர்வதேச அங்கீகாரத்தைத் தூத்துக்குடி துறைமுகம் எட்டியுள்ளது.

வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத்தின் தலைவர் சுசாந்த குமார் புரோஹித் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இச்சான்றிதழ் துறைமுகத்தின் வளர்ச்சிக்கு மிக முக்கியமான மைல்கல் எனக் குறிப்பிட்டுள்ளார். எரிசக்தியைப் பொறுப்புடன் பயன்படுத்துதல், அதன் செயல்திறனைத் தொடர்ந்து மேம்படுத்துதல் மற்றும் நிலையான சுற்றுச்சூழல் வளர்ச்சியில் துறைமுகம் கொண்டுள்ள உறுதியை இந்தச் சான்றிதழ் பறைசாற்றுகிறது.

மத்திய அரசின் ‘ஹரித் சாகர்’ பசுமைத் துறைமுக வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப, வ.உ.சிதம்பரனார் துறைமுகம் தொடர்ந்து பல்வேறு கட்டமைப்பு மாற்றங்களைச் செய்து வருகிறது. 2070-ம் ஆண்டிற்குள் 'நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு' என்ற இலக்கை அடையும் நோக்கில், எரிசக்தித் திறனை அதிகரிக்கும் பசுமை நடவடிக்கைகளைத் துறைமுகம் தீவிரமாகச் செயல்படுத்தி வருகிறது.