முதல் ரெய்டே தோல்வியா?.. முதல்வர் விஜய்க்கு பின்னடைவு!
தி.மு.க. முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்குச் சொந்தமான இடங்களில் நேற்று லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில், எதிர்பார்த்த முக்கிய ஆவணங்களோ அல்லது பெரிய அளவிலான ரொக்கப் பணமோ சிக்காததால், தவெக அரசின் முதல் லஞ்ச ஒழிப்பு நடவடிக்கை தொய்வடைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. இதனால் முதல்வர் விஜய் அப்செட் அடைந்துள்ளதாகத் தலைமைச் செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை எடுத்த இந்த நடவடிக்கையின் பின்னணி விபரம் வெளியாகியுள்ளது. கரூர் கோட்டத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் புதிய சாலைகளே அமைக்கப்படாத நிலையில், காகித அளவில் மட்டுமே சாலை அமைக்கப்பட்டதாகக் காண்பித்து, அதற்கான முழுத் தொகையையும் விதிகளுக்குப் புறம்பாக விடுவித்ததாகப் புகார் எழுந்தது.
இந்த டெண்டர் முறைகேடு மற்றும் போலி பில் பரிவர்த்தனைகள் தொடர்பான அசல் கோப்புகள் மற்றும் முக்கியப் பணப் பரிமாற்ற ஆதாரங்களைக் கைப்பற்றுவதையே முதன்மை நோக்கமாகக் கொண்டு நேற்றைய சோதனை திட்டமிடப்பட்டது. நேற்று காலை துவங்கிய ரெய்டு, விடிய விடிய 13-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். சோதனையின் முடிவில் ரூ. 40 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் சில டிஜிட்டல் ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை வெளியிட்டது.
இருப்பினும், ஒரு முன்னாள் அமைச்சரின் வீட்டில் பல கோடி ரூபாய் அளவிலான முறைகேடு புகாரின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையில், வெறும் 40 லட்சம் ரூபாய் மட்டுமே சிக்கியது லஞ்ச ஒழிப்புத்துறைக்குக் கிடைத்த பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. மேலும், முறைகேட்டை நீதிமன்றத்தில் நிரூபிக்கத் தேவையான மிக வலுவான அசல் ஆவணங்கள் எதுவும் அதிகாரிகளிடம் சிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு, முந்தைய திமுக ஆட்சியின் ஊழல்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட முதல் மிக முக்கிய உளவுத்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை இதுவாகும். மிகப் பெரிய அளவில் ஆதாரங்கள் திரட்டப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்தச் சோதனை எதிர்பார்த்த பலனைத் தராததால் முதலமைச்சர் விஜய் லஞ்ச ஒழிப்புத்துறையின் முதற்கட்டச் செயல்பாடுகள் குறித்து மிகுந்த அதிருப்தி அடைந்துள்ளதாகத் தெரிகிறது.
போதிய முன்னெச்சரிக்கை மற்றும் துல்லியமான உளவுத் தகவல்கள் இன்றி அவசரகதியில் இந்தச் சோதனை நடத்தப்பட்டதா அல்லது சோதனை விபரங்கள் முன்கூட்டியே கசிந்ததா என்பது குறித்துத் துறை ரீதியான விசாரணைகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளதாகத் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.