வாயில் கவ்விய மீன் உயிரைப் பறித்தது.. மீன்பிடிக்கச் சென்ற இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்!
ஒடிசா மாநிலத்தில் மீன்பிடிக்கச் சென்ற இளைஞர் ஒருவர், தான் பிடித்த மீனை வாயில் கவ்வியபோது, அது தொண்டைக்குள் சிக்கி மூச்சுத்திணறலால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அபினாஷ் பிஜுலி. இவர் தனது ஊரில் உள்ள நீர்நிலையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு மீன் அவர் கையில் சிக்கியது. அந்த மீன் துள்ளிக் கொண்டு கையை விட்டு நழுவ முயன்றதால், அதைத் தப்பிக்க விடக்கூடாது என்ற வேகத்தில் அபினாஷ் அந்த மீனை அப்படியே தனது வாயில் கவ்விப் பிடித்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக, துள்ளிக் கொண்டிருந்த அந்த உயிருள்ள மீன் வழுக்கிக் கொண்டு அவரது தொண்டைக்குள் ஆழமாகச் சென்றது. மீன் நேராகச் சென்று அவரது மூச்சுக்குழாயை அடைத்துக் கொண்டது.
தொண்டையில் மீன் சிக்கியதால் மூச்சு விட முடியாமல் அபினாஷ் துடித்துள்ளார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்க முயன்றும் பலனளிக்கவில்லை. உடனடியாக அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே மூச்சுத்திணறல் காரணமாக அபினாஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.
மீன்பிடிக்கச் செல்பவர்கள் இதுபோன்று வாயில் மீனை வைத்துப் பிடிப்பது ஆபத்தானது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். உயிருள்ள மீன்கள் துள்ளும்போது அவை தொண்டைக்குள் சென்றால், அதன் செதில்கள் அல்லது முட்கள் சதையில் சிக்கிக் கொள்ளும். இதனால் அதனை அவ்வளவு எளிதாக வெளியே எடுக்க முடியாது.
மீன்பிடிக்கச் செல்லும் மக்கள் விழிப்புடனும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் என்பதற்கு இந்தச் சோகமான சம்பவம் ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.