இன்று கோவையில் இறுதிசடங்கு.... 'வில் அம்பு' பட இயக்குநர் ரமேஷ் சுப்ரமணியம் காலமானார்!

 

தனது அறிமுகப்படமான ‘வில் அம்பு’ படத்திலேயே ரசிகர்களைக் கவனிக்க வைத்த இயக்குநர் ரமேஷ் சுப்ரமணியம் (49), உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனளிக்காமல் நேற்று காலமானார். அவரது  திடீர் மறைவு தமிழ் திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில காலமாகப் தீவிரமான எலும்புப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தொடர் சிகிச்சைப் பெற்று வந்த அவர், இன்று சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார்.

கடந்த 2016-ம் ஆண்டு ஸ்ரீ, ஹரீஷ் கல்யாண், சம்ஸ்கிருதி மற்றும் சிருஷ்டி டாங்கே ஆகியோர் நடிப்பில் வெளியான 'வில் அம்பு' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இரண்டு வெவ்வேறு மனிதர்களின் வாழ்வியல் சூழல் எவ்வாறு ஒன்றோடொன்று இணைகிறது என்ற மாறுபட்ட திரைக்கதையுடன் வெளியான இத்திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

'வில் அம்பு' திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, சுமார் 10 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் 'தி கில்லர் மேன்' என்ற புதிய திரைப்படத்தை இவர் இயக்கி வந்தார். இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த சூழலில், படம் வெளியாவதற்கு முன்பே அவர் காலமடைந்தது திரையுலகினரைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இயக்குநர் ரமேஷ் சுப்ரமணியத்தின் மறைவுக்குப் திரைத்துறையைச் சேர்ந்த இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். மருத்துவமனை நடைமுறைகளுக்குப் பிறகு, அவரது உடல் இறுதி அஞ்சலிக்காக அவரது சொந்த ஊரான கோவைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. கோவை சுகுணாபுரத்தில் இன்று அவரது இறுதிச் சடங்குகளும், அஞ்சலி நிகழ்வுகள் நடைபெறுகிறது.