"தங்க மோதிரம்" திட்டம்... புதிய சர்ச்சையில் சிக்கினார் முதலமைச்சர் விஜய்!
தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்குத் தங்க மோதிரம் வழங்கும் புதிய திட்டம் குறித்த அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, தற்போதைய முதலமைச்சர் விஜய் புதிய அரசியல் சர்ச்சையில் சிக்கியுள்ளார். தேர்தல் காலத்தில் தவெக அளித்த வாக்குறுதிக்கும், அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பாணைக்கும் இடையே உள்ள முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டி எதிர்க்கட்சிகளும் பொதுமக்களும் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
தவெக தலைவராக இருந்தபோது கடந்த மகளிர் தின விழா நிகழ்ச்சியில் பேசிய விஜய், "நமது கழகம் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் ஒரு தங்க மோதிரம் மற்றும் தாய்மாமன் சீர் பெட்டகம் வழங்கப்படும்" என்று மேடையில் பேசியிருந்தார். அவர் 'அனைத்துக் குழந்தைகளுக்கும்' என்று பொதுப்படையாகப் பேசிய பழைய வீடியோ சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்களால் மிக வேகமாகப் பகிரப்பட்டு, வைரலாகி வருகிறது.
தவெக அரசு வெளியிட்டுள்ள புதிய திட்டத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில், "அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும்" மட்டுமே இந்தத் தங்க மோதிரம் மற்றும் தாய்மாமன் சீர் பெட்டகம் வழங்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
எதனியார் மருத்துவமனைகளில் பிரசவம் பார்க்கும் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பக் குழந்தைகளுக்கு இந்தத் திட்டம் பொருந்தாது என்பதைச் சுட்டிக்காட்டி, இது மக்களை ஏமாற்றும் செயல் என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
அரசு மருத்துவமனைகளில் பிரசவங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், ஏழை எளிய தாய்மார்களுக்கு நேரடியாக இந்த உதவி சென்றடைவதை உறுதி செய்யவும் மட்டுமே இந்த நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், "அனைத்துக் குழந்தைகளுக்கும்" என்று வாக்குறுதி அளித்துவிட்டு, "அரசு மருத்துவமனை குழந்தைகளுக்கு மட்டும்" எனச் சுருக்கியுள்ளது முதலமைச்சர் விஜய்யின் 'சொல் ஒன்று, செயல் ஒன்று' என்ற பாணியைக் காட்டுகிறது எனப் பரவலான அரசியல் விவாதங்கள் எழுந்துள்ளன.