தமிழகம் முழுவதும் கலெக்டர்களுக்கு அரசு அவசர உத்தரவு... டெங்கு பரவலைத் தடுக்க போர்க்கால நடவடிக்கை!
தமிழகத்தில் டெங்கு மற்றும் பருவகாலக் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, அவற்றை முழுமையாகக் கட்டுப்படுத்திடப் போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் காய்ச்சலால் பாதிக்கப்படுவோருக்கெனத் தனி வார்டுகள் உடனடியாக அமைக்கப்பட வேண்டும் என்றும், நோயாளிகளுக்குத் தேவையான அனைத்து உயிர் காக்கும் மருந்துகளும் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டெங்கு சிகிச்சைக்கு மிகவும் அவசியமான ரத்தத் தட்டணுக்கள் மற்றும் ரத்த மாதிரிகள் எவ்விதத் தடையுமின்றி 24 மணி நேரமும் தங்குதடையின்றி கிடைப்பதை மருத்துவமனை நிர்வாகங்கள் உறுதிப்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட அளவில் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் தொடர்ச்சியாக ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி, டெங்கு தடுப்புப் பணிகளைத் தீவிரப்படுத்துவதுடன், இதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கையைத் தமிழக அரசுக்குத் தாக்கல் செய்யுமாறு ஆட்சியர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.