“விஜய்க்கு மே 10 வரை ஆளுநர் அவகாசமளித்திருக்கிறார் - அதுவரை திமுக பொறுமையாக இருக்கும்” - டி.கே.எஸ்.இளங்கோவன்!
தமிழகத்தில் ஆட்சி அமைப்பதில் நிலவும் குழப்பங்களுக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு ஆளுநர் மாளிகை வழங்கியுள்ள கால அவகாசம் குறித்த புதிய தகவலைத் திமுக அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் வெளியிட்டுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த டி.கே.எஸ்.இளங்கோவன் கூறுகையில், "ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையை நிரூபிக்கத் தவெக தலைவர் விஜய்க்கு, தமிழகப் பொறுப்பு ஆளுநர் வரும் மே 10-ஆம் தேதி வரை கால அவகாசம் அளித்துள்ளார். ஆளுநர் அளித்துள்ள அந்த நாள் வரை திமுக பொறுமை காக்கும். அதுவரை தமிழக அரசியலில் நடக்கும் நகர்வுகளை உன்னிப்பாகக் கவனிப்போம்" எனத் தெரிவித்துள்ளார்.
தவெக தற்போது 108 இடங்களை மட்டுமே வைத்துள்ள சூழலில், மே 10-ஆம் தேதிக்குள் மற்ற கட்சிகளின் ஆதரவைத் திரட்டி 118 என்ற எண்ணிக்கையை எட்ட வேண்டிய கட்டாயத்தில் விஜய் உள்ளார். ஒருவேளை குறிப்பிட்ட அந்தத் தேதிக்குள் விஜய்யால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை என்றால், அடுத்தகட்டமாகத் திமுக தனது வியூகத்தை மாற்ற வாய்ப்புள்ளது. தொங்கு சட்டப்பேரவைத் தவிடுபொடியாகி, மீண்டும் ஒரு தேர்தலைச் சந்திக்கவோ அல்லது மாற்று ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கவோ திமுக திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தவெக-விற்கு முட்டுக்கட்டை போடாமல் ஜனநாயக ரீதியாக ஆளுநர் அளித்துள்ள கால அவகாசத்தை திமுக ஏற்றுக் கொண்டுள்ளது. எனினும், அந்தத் தேதிக்குப் பிறகு திமுக தனது அரசியல் பலத்தைக் காட்டி ஆட்சி அமைப்பதற்கான உரிமையைக் கோருமா அல்லது சட்டமன்றத்தைக் கலைக்கப் பரிந்துரைக்குமா என்பது மே 10-ஆம் தேதி மாலை தெரிந்துவிடும்.