"இலக்கிய உலகின் பேரிழப்பு".. கவிஞர் புவியரசு உடலுக்கு அரசு மரியாதை - முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!
தமிழ் திரையுலகிலும் இலக்கிய உலகிலும் முத்திரை பதித்த சாகித்ய அகாதமி விருது பெற்ற முதுபெரும் கவிஞரும், எழுத்தாளருமான புவியரசு காலமானார். அவரது மறைவுக்குத் தமிழக முதலமைச்சர் விஜய் தனது ஆழந்த இரங்கலைத் தெரிவித்துள்ளதோடு, மறைந்த கவிஞரின் உடலுக்குத் தமிழக அரசு சார்பில் 'அரசு மரியாதை' செலுத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
கவிஞர் புவியரசுவின் மறைவுச் செய்தி அறிந்தவுடன் முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ இரங்கல் செய்தியில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
"சாகித்ய அகாதமி விருது பெற்ற கவிஞரும் எழுத்தாளருமான ஐயா புவியரசு அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வேதனையும் துயரமும் அடைந்தேன். சமூகப் பொறுப்பைத் தனது வரிகளில் எப்போதும் வலியுறுத்தும் கவிதைகளையும், உலக இலக்கியங்களைத் தமிழுக்குக் கொண்டு சேர்த்த மொழிபெயர்ப்புகளிலும் முத்திரை பதித்தவர் அவர். அவரது மறைவால் வாடும் குடும்பத்தாருக்கும், தமிழ் இலக்கிய உலகைச் சேர்ந்தோருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்."
கோவையைச் சேர்ந்த கவிஞர் புவியரசு, தமிழ் நவீனக் கவிதை உலகில் மிக முக்கிய ஆளுமையாகத் திகழ்ந்தவர். புகழ்பெற்ற 'புரட்சிக்காரன்' (மறைந்த கவிஞர் காஜி நஸ்ருல் இஸ்லாமின் வங்காளக் கவிதைகளின் மொழிபெயர்ப்பு) மற்றும் 'கையொப்பம்' உள்ளிட்ட இலக்கியப் படைப்புகளுக்காகச் சாகித்ய அகாதமி விருதைப் பெற்றவர்.
அரசு மரியாதை: தமிழ் மொழிக்கும், இலக்கியத் துறைக்கும் அவர் ஆற்றிய ஒப்பற்ற சேவையைப் போற்றும் விதமாக, கோவையில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்குத் தமிழக அரசு சார்பில் முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடத்த முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.