திருமணம் முடிந்த சில மணி நேரத்தில் விபத்தில் மணமகன் பலி; மணமகள் மீட்பு!

 

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தம்பதியினருக்குத் திருமணம் முடிந்த சில மணி நேரங்களிலேயே ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் மணமகன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் டாட்சன்வில் பகுதியில் இந்திய வம்சாவளியினரான டேவ் ஃபிஜி மற்றும் ஜென்சி ஆகியோரது திருமண விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு இருவரும் ஹெலிகாப்டரில் தங்களது பயணத்தைத் தொடங்கினர். அப்போது ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் மணமகன் டேவ் ஃபிஜி மற்றும் ஹெலிகாப்டரை இயக்கிய விமானியும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தின்போது மணமகள் ஜென்சி, தனது கணவரின் உடலுக்கு அடியில் சுமார் 6 மணி நேரம் சிக்கித் தவித்து பின்னர் உயிருக்குப் போராடிய நிலையில் மீட்கப்பட்டார்.

வானிலையின் மோசமான நிலையைத் துளியும் கவனிக்காமல் அலட்சியமாக ஹெலிகாப்டரை இயக்கியதாகக் கூறி, சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது மணமகள் ஜென்சி நீதிமன்றத்தில் சட்டப்பூர்வ வழக்குத் தொடர்ந்துள்ளார்.