முதல்வர் விஜய் படத்தின் முன் பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
புதுச்சேரி வில்லியனூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக நிர்வாகியின் மகள் திருமணம் ஒன்று, தற்போதைய முதலமைச்சர் சி.எம்.விஜய்யின் பிரம்மாண்ட புகைப்படத்தின் முன்னிலையில் நடந்து முடிந்துள்ளது. இந்த வித்தியாசமான திருமண நிகழ்வின் ஒளிப்படங்களும், காணொளிகளும் தற்போது சமூக வலைதளங்களில் நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகின்றன.
புதுச்சேரி வில்லியனூர் பகுதியைச் சேர்ந்த தவெக முக்கிய நிர்வாகியான பிரபு என்பவரது மகளுக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்தத் திருமண விழாவிற்குத் தமிழக முதலமைச்சரும், தவெக தலைவருமான விஜய்யை நேரில் அழைப்பதற்காகப் பிரபு குடும்பத்தினர் திட்டமிட்டிருந்தனர். இருப்பினும், தற்போதைய ஆட்சிப் பொறுப்பு மற்றும் பல்வேறு அலுவல் சார்ந்த பணிகள் காரணமாக முதலமைச்சர் விஜய்யால் இந்தத் திருமண விழாவிற்கு நேரில் வர இயலாத சூழல் ஏற்பட்டது.
முதலமைச்சர் விஜய் நேரில் வர முடியாவிட்டாலும், அவரது முன்னிலையிலேயே திருமணம் நடக்க வேண்டும் என மணமக்களின் குடும்பத்தினர் விரும்பியுள்ளனர். இதற்காக, திருமண மேடையின் மையப்பகுதியில் முதலமைச்சர் விஜய்யின் ஒரு பிரம்மாண்டமான முழு உருவப் புகைப்படம் வைக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து நடைபெற்ற முகூர்த்த நிகழ்வின் போது, மணமேடையில் வைக்கப்பட்டிருந்த முதலமைச்சர் விஜய்யின் அந்தப் புகைப்படத்தை நோக்கி வணங்கி, அதனைச் சாட்சியாக முன் வைத்தே மணமகள் கழுத்தில் மணமகன் தாலி கட்டினார்.
புதுவை வில்லியனூரில் நடைபெற்ற இந்தத் திருமண வரவேற்பு விழாவில், தமிழக அமைச்சர்களான ஆனந்த் மற்றும் ராஜ்குமார் ஆகியோர் நேரில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
முதலமைச்சரின் தீவிரத் தொண்டராக இருக்கும் தவெக நிர்வாகி, தலைவரின் மீதான தனது பாசத்தை வெளிப்படுத்தும் விதமாகத் திருமண மேடையில் அவரது புகைப்படத்தை வைத்தது, அங்கு வந்திருந்த உறவினர்கள் மற்றும் தவெக தொண்டர்கள் மத்தியில் நெகிழ்ச்சியையும் சுவாரஸ்யத்தையும் ஏற்படுத்தியது.