அமெரிக்காவின் முதல் அதிபர் ஜார்ஜ் வாஷிங்டனின் தலைமுடி ஏலத்தில் ரூ.3.36 லட்சத்திற்கு விற்பனை! 

 

அமெரிக்காவின் முதல் அதிபரும் வரலாற்றுத் தலைவருமான ஜார்ஜ் வாஷிங்டனின் தலைமுடி கற்றை ஒன்று, சமீபத்தில் நடைபெற்ற ஏலத்தில் 4,000 அமெரிக்க டாலர்களுக்கு (இந்திய மதிப்பில் சுமார் ரூ.3.36 லட்சம்) விற்பனையாகியுள்ளது. சுமார் 227 ஆண்டுகளுக்கு முன்பு சேகரிக்கப்பட்ட இந்த அரிய வரலாற்று நினைவுச் சின்னம், சர்வதேச வரலாற்று ஆர்வலர்கள் மற்றும் சேகரிப்பாளர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த தலைமுடியை ஏலத்தில் விற்ற ‘ரிச்மண்ட் ஏல நிறுவனம்’ வெளியிட்டுள்ள தகவலின்படி, ஜார்ஜ் வாஷிங்டன் 1799-ஆம் ஆண்டு உயிரிழப்பதற்கு சற்று முன்பு, அவருக்கு விருந்தளித்து உபசரித்த ஜான் கேட்ஸ்பி என்பவரிடம் இந்தத் தலைமுடி இருந்துள்ளது. விர்ஜினியாவின் அலெக்ஸாண்ட்ரியா நகரில் வசித்து வந்த ஜான் கேட்ஸ்பி, 1798 மற்றும் 1799 ஆகிய ஆண்டுகளில் வாஷிங்டனின் பிறந்தநாள் கொண்டாட்டங்களைத் தனது இல்லத்தில் சிறப்பாக நடத்தியுள்ளார்.

வாஷிங்டனின் இறுதி நாட்களில் அவருடன் இருந்த நட்பின் அடையாளமாகத் தனது தாத்தா ஜான் கேட்ஸ்பிக்கு இந்தத் தலைமுடி கிடைத்ததாகவும், அதனைப் பிரேம் செய்து வாஷிங்டன் நகரிலுள்ள தங்களது வீட்டில் ஜார்ஜ் வாஷிங்டனின் உருவப்படத்திற்குக் கீழே மாட்டி வைத்திருந்ததாகவும் கேட்ஸ்பியின் பேத்தி ஜூலியா டென் ஐக் மெக்பிளேர் 1928-ஆம் ஆண்டு அளித்த வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார். பின்னர், கேட்ஸ்பியின் வாரிசுகளிடமிருந்து ஜான் கே. லாட்டிமர் என்ற சேகரிப்பாளர் இதனைப் பெற்றுப் பாதுகாத்து வந்தார். தற்போது ஏலத்தில் இதனை வாங்கிய புதிய உரிமையாளரின் பெயர் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

19-ஆம் நூற்றாண்டில் அன்புக்குரியவர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களின் தலைமுடியை நினைவுச் சின்னமாகப் பாதுகாத்து வைக்கும் வழக்கம் உயர்குடி மக்களிடையே மிகவும் பிரபலமாக இருந்தது. அந்த வகையில், ஜார்ஜ் வாஷிங்டன் வசித்த மவுண்ட் வெர்னான் அருங்காட்சியகத்தில் மட்டும் அவரது 50-க்கும் மேற்பட்ட தலைமுடி மாதிரிகள் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

ஜார்ஜ் வாஷிங்டனுடன் தொடர்புடைய அரிய பொருட்களுக்கு ஏல சந்தையில் எப்போதும் அதிக மதிப்பு இருந்து வருகிறது. முன்னதாக, 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற ஏலத்தில், வாஷிங்டனின் மரணத்திற்குப் பிறகு சேகரிக்கப்பட்டதாகக் கருதப்படும் 3 தலைமுடிகள் அடங்கிய லாக்கெட் ஒன்று சுமார் 40,000 டாலர்களுக்கு ஏலம் போனது. அதேபோல், 1776-ஆம் ஆண்டு வாஷிங்டன் கையொப்பமிட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கடிதம் ஒன்று கடந்த ஜூலை மாதம் 1,09,800 டாலர்களுக்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.