18 வயது நிரம்பாத சிறுமி மனைவியாக இருந்தாலும் தாம்பத்யம் வைப்பது சட்டப்படி குற்றமே - உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

 

கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில் 17 வயது சிறுமிக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்ட விவகாரத்தில், தனிநபர் சட்டங்களை விட போக்சோ சட்டத்திற்கே முன்னுரிமை உண்டு என்று உயர் நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கு ஆசைவார்த்தைக் கூறி அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறல் செய்ததாக வாலிபர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், சிறுமியின் பெற்றோர் காவல்துறையில் புகார் அளிக்காமல், இருவீட்டார் தரப்பும் பேசி அந்த வாலிபருக்கே சிறுமியைத் திருமணம் செய்து வைத்தனர்.

இந்த விவகாரம் குறித்து அறிந்த மன்னார்காடு காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபரைக் கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் வெளிவந்த அவர், முஸ்லிம் தனிநபர் சட்டத்தின் படியே திருமணம் நடைபெற்றதாகவும், தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் கேரளா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த தனி அமர்வு நீதிபதி ஜோபின் செபஸ்டின், சிறுமிக்கு 18 வயது நிறைவடையாத பட்சத்தில் தனிநபர் சட்டங்கள் எவையும் போக்சோ வழக்கில் செல்லுபடியாகாது என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்தார்.

சிறுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவே போக்சோ சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட நீதிமன்றம், "மனைவியாக இருந்தாலும், 18 வயது நிரம்பாத சிறுமியுடன் தாம்பத்யம் வைப்பது போக்சோ சட்டப்படி குற்றமாகும்" எனத் தீர்ப்பளித்தது. மேலும், சட்டவிரோதத் திருமணத்திற்கு உடந்தையாக இருந்த சிறுமியின் பெற்றோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.